Bihar Election 2025 NDA: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், தலா 101 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
என்டிஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு
பீகார் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 14ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தொகுதிப் பங்கீடடு இறுதி செய்யப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரும், பாஜகவின் பீகார் தேர்தல் பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான், ”இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும்” என தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். கூட்டணியை வலுப்படுத்துவதற்காக இரண்டு பெரிய கட்சிகளும், இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு MP-க்கு 6 MLA சீட்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையானது தங்களுடன் உள்ள சிறிய கட்சிகளுக்காக, ஒரு புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, அந்த கட்சிகள் வைத்திருக்கும் ஒவ்வொரு மக்களவை உறுப்பினருக்கும் ஆறு சட்டமன்ற இடங்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி, ஐந்து எம்.பி.க்களை பிரதிநிதித்துவப்படுத்தும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வானுக்கு 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்.எல்.எம்) மற்றும் ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்.ஏ.எம்) ஆகியவை தலா ஆறு இடங்களைப் பெற்றுள்ளன. இந்த அணுகுமுறை, சிராக் பஸ்வான் மற்றும் பிற சிறிய கூட்டாளிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மையை அளித்து. NDA கூட்டணியின் ஒற்றுமையைப் பேண, அதன் கூட்டாளிகளுக்கு இடமளிக்க JD(U) அளித்த சலுகையாக இது கருதப்படுகிறது.
தியாகிகளான பாஜக, நிதிஷ்
ஜே.டி.(யு) 2020 இல் 115 இடங்களில் போட்டியிட்ட நிலையில் 2025 இல் அது 101 இடங்களாகக் குறைந்துள்ளது. அதாவது கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் 14 இடங்களைக் விட்டுக் கொடுத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 115 இடங்களில் போட்டியிட்டாலும் நிதிஷின் கட்சி 43 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. மறுமுனையில் பாஜகவும் 2020 ஆம் ஆண்டில் போட்டியிட்ட 110 இடங்களிலிருந்து 9 தொகுதிகளை விட்டுக் கொடுத்து, தற்போது 101 இடங்களில் மட்டுமே போட்டியிட உள்ளது. தொகுதி பங்கீடு எதுவாக இருந்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் முகமாக நிதிஷ் குமார் தொடர்ந்து இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பத்தில் I.N.D.I.A.
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணியில், தற்போது வரை தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் 50 முதல் 55 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என ஜனதா தளம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அதேபோல் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் கணிசமான தொகுதிகளை மட்டுமே ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். முதலமைச்சர் வேட்பாளராக தொடர்வதை உறுதி செய்ய, கூட்டணியில் அதிகப்படியான தொகுதிகளை பெற்று வலுவாக திகழ தேஜஸ்வி யாதவ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக, எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெற உள்ளது.