நாடுமுழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப மின்சாரத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவில் மின்சாரத்திற்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் மின்சார தேவையை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்களில் மின்வெட்டை மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு இருக்கதான் செய்கிறது. அதேபோல், பீகார் மாநிலத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாத ஒன்றாக பொதுமக்களிடையே பழகி விட்டது.
இந்தநிலையில், பீகார் மாநிலம் சசராம் மாவட்ட அரசு மருத்துவமனையில் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் அவசரநிலை கருதி செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர் பிரிஜேஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இங்கு சில பிரச்னைகளால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நாம் ஒவ்வொரு நாளும் மோசமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டும். நோயாளிகள் மொபைல் அல்லது டார்ச் லைட்டின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றார்.
இந்தியாவில் சுகாதார வசதிகளை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. கொரோனா அலைக்கு பிறகு இது வேகமெடுத்துள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. இருப்பினும், பீகாரின் சசரம் மாவட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு பீகாரில் மின்சாரத்தின் நிலைமை மாறிவிட்டது. இதனால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கவலையடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்