பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்த கருத்து மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. நிதிஷின் கருத்து மாநிலத்தின் இமேஜுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இருப்பதாக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.


இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறப்பாக செயல்பட்ட தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய போதிலும், வட மாநிலங்கள், குறிப்பாக, உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


நிலைமை இப்படியிருக்க, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெண்கள் படிப்பறிவு இல்லாமல் இருக்கும் நிலையில், ஆண்கள் பொறுப்பை ஏற்காமல் இருப்பதால் மக்கள் தொகை கட்டுக்குள் வராமல் உள்ளது என அவர் கூறியுள்ளார். 


யாத்திரை மேற்கொண்டு வரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் வைஷாலியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "பெண்கள் கல்வியறிவு பெற்றால் தான், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கட்டுப்படுத்தப்படும். இது இன்னும் குறையவில்லை, அதே விகிதத்தில் உள்ளது. 


பெண்கள் சிறப்பான முறையில் கல்வியறிவு பெற்றிருந்தால் அல்லது அவர்களுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால், கர்ப்பம் தரிப்பதில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். 


ஆண்கள் தங்கள் செயலின் விளைவைப் பற்றி சிந்திக்கத் தயாராக இல்லை. மேலும், பெண்கள் சரியாகப் படிக்காததால் அவர்களால் அதிகாரத்தை செலுத்த முடியவில்லை. மக்கள்தொகை வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை" என்றார்.


நிதிஷ் குமாரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்து மாநிலத்தின் இமேஜுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இருப்பதாக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.


 






நிதிஷ் குமாரை விமர்சித்துள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சாம்ராட் சௌத்ரி, "நிதீஷ் குமார் பயன்படுத்திய அநாகரீகமான வார்த்தைகள் அறியாமையின் உச்சம். இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, முதலமைச்சர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்" என்றார்.


கடந்த 2005ஆம் ஆண்டு முதல் மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் நிதிஷ் குமார். நடுவில், சிறிது காலம் மட்டும் முதலமைச்சர் பதவியை தனது கட்சியை சேர்ந்த ஜிதன் ராம் மாஞ்சிக்கு அளித்திருந்தார். மற்றபடி,15 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துவிட்டு பெண்கள் படிப்பறிவு இல்லாமல் இருக்கின்றனர் என நிதிஷ் விமர்சித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.