மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.


எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி:


குறிப்பாக, பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


அதன் தொடர்ச்சியாக, பிகார் முதலமைச்சரும் நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான நிதிஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.


காங்கிரஸ் கட்சிக்கு அட்வைஸ்:


பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நிதிஷ் குமார், "ஐக்கிய முன்னணியின் மூலம் பாஜகவை 100 இடங்களுக்கு கீழ் குறைக்க முடியும். நீங்கள் (காங்கிரஸ்) விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 


அவர்கள் எனது ஆலோசனையை ஏற்று ஒன்றாகப் போட்டியிட்டால், அவர்களை (பாஜக) 100 இடங்களுக்கு கீழ் குறைக்க முடியும். ஆனால் அவர்கள் எனது ஆலோசனையை ஏற்கவில்லை என்றால், என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். பிரதமராக வேண்டும் என்ற லட்சியம் எனக்கில்லை. பதவிக்கான போட்டியாளராக இருந்ததில்லை.


இதுதான் லட்சியம்:


நாட்டை ஒன்றிணைத்து, வெறுப்புணர்வை பரப்பும் மக்களிடம் இருந்து விடுவிப்பதே எனது ஒரே லட்சியம். எனக்கு உண்மையில் எதுவும் வேண்டாம். நாங்கள் உங்களுடன் நிற்போம்" என்றார்.


இந்த கூட்டத்தில் பல்வேறு எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், பிகார் முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.


கடந்த ஆண்டு, பாஜக கூட்டணியிலிருந்து விலகிய பிகார் மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 8ஆவது முறையாக முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.


நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமாரும், மற்ற எதிர்கட்சி தலைவர்களை போல பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்து வருகிறார்.


கடந்தாண்டு இதுகுறித்து பேசியிருந்த அவர், "பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் கைகோர்க்க ஒப்புக்கொண்டால் 2024 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியும்" என்றார்.


அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக உள்ளார் நிதிஷ் குமார். குறிப்பாக, பாஜக வலுவாக உள்ள பிகாரில் அவர்களது கூட்டணியில் இருந்து விலகி அவர்களுக்கு எதிராகவே அரசியல் செய்து வருகிறார் நிதிஷ் குமார்.