பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் அரசாங்கத்தில் 21 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து, பீகார் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. 


பிகாரில் அமைச்சரவை விரிவாக்கம்:


அதில், 12 பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், 12 பேரில் 6 பேர் முதல்முறை அமைச்சர்கள் ஆவர். பாஜகவை சேர்ந்த மங்கள் பாண்டே, அருணா தேவி, நீரஜ் பப்லு, நிதிஷ் மிஸ்ரா, நிதின் நவீன், ஜனக் ராம், கேதார் குப்தா, திலீப் ஜெய்ஸ்வால், ஹரி சாஹ்னி, கிருஷ்ணா நந்தன் பாஸ்வான், சுரேந்திர மேத்தா, சந்தோஷ் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.


நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த அசோக் சவுத்ரி, லேஷி சிங், மதன் சாஹ்னி, மகேஷ்வர் ஹசாரி, ஷீலா குமாரி மண்டல், சுனில் குமார், ஜெயந்த் ராஜ், ஜமா கான் மற்றும் ரத்னேஷ் சதா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.


பீகாரை பொறுத்தவரையில் அதிரடி அரசியல் மாற்றங்களை சந்தித்து வருகிறது. பாஜகவுடனும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து வரும் நிதிஷ் குமார், இந்த முறை பாஜகவுடன் கைக்கோர்த்துள்ளார்.


சூடுபிடிக்கும் அரசியல் களம்:


எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சமீபத்தில் இணைந்தார். இதையடுத்து, பிகார் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்று கொண்டார். அதை தொடர்ந்து, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் நடந்துள்ளது.


அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்க உள்ளது. இந்த சூழலில், மக்களவை தேர்தலையொட்டி பாஜக, ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜகவும் 16 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் உபேந்திர குஷ்வாஹா மற்றும் ஜிதன் ராம் மஞ்சி ஆகியோருக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு அடுத்து இடத்தில்தான் பாஜக இருந்து வந்தது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, சூழல் மாறி, தற்போது கூட்டணிக்கு தலைமை ஏற்கும் இடத்திற்கு வந்துள்ளது.


இதையும் படிக்க: Kavitha Arrest: சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? கேசிஆர் மகள் கவிதா கைது! அமலாக்கத்துறை அதிரடி!