பீகாரில் பொதுத்தேர்வு பரீட்சை ஹாலில் காப்பியடித்தல் அமோகமாக அரங்கேறியுள்ளது. பிரகாஷ் குமார் என்ற பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.


அதில் பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள சந்த கபீர் கல்லூரியில் பொதுத் தேர்வு நடந்தது. அப்போது தேர்வு அறையில் இருந்த மாணவர்கள் தங்களுக்குள் கேட்டு எழுதினர். சிலர் பிட் அடித்தனர். அது போதாது என்று கேட்டுக்கு வெளியே நின்றிருந்த உறவினர்கள் கேள்விகளுக்கான பதிலை சொல்லிக் கொண்டிருந்தனர். இவை அத்தனையும் கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.


காப்பியடித்தல் மற்றும் இதுபோன்று பெற்றோர், உறவினர் உதவியுடன் பிட்டடித்தல் எல்லாம் பீகாருக்கு புதிதல்ல. 2015ஆம் ஆண்டு ஒரு பெரிய கட்டிடத்தின் ஜன்னல்களை நோக்கி கயிறு கட்டி பெற்றோர், உறவினர்கள் ஏறி தேர்வர்களுக்கு உதவியது மறக்க முடியாததாகும். எஸ்எஸ்சி தேர்வு எழுத வந்தவர்கள்தான் அந்த மாஸ் காப்பியடித்தலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீண்டும் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.






கட்டுப்பாடுகளிலும் நூதனம்:


காப்பியடித்தலில் தான் மாணவர்கள் நூதனமாக செயல்படுகின்றனர் என்றால் கட்டுப்பாடுகளிலும் நூதனமாகத் தான் செயல்படுகின்றனர் ஆசிரியர்கள். 2019 ஆம் ஆண்டு பெங்களூருவில் ஒரு தேர்வு அறையில் நடந்த முன்னெச்சரிக்கை சம்பவம் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம்.


கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்க்க அவர்கள் தலையில் அட்டைப்பெட்டியை கவத்தி வைத்து தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பெங்களூரிலிருந்து 330கி.மீ தொலைவில் உள்ள ஹவேரியில் உள்ளது பகத் பி.யூ. கல்லூரி. தனியாருக்கு சொந்தமான இந்த கல்லூரியில் மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டியை கவத்தி வைத்து தேர்வு எழுத வைத்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவலாக பரப்பப்பட்டன. 


இதுதொடர்பான புகைப்படங்களில், மாணவர்களை அட்டைப்பெட்டி வைத்து தேர்வு எழுத வைத்ததோடு, அவர்கள் எழுதுவதை ஆய்வாளர்கள் கண்காணித்தும் வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு சமூகவலைதளங்களில் பலத்த கண்டனங்கள் எழுந்தன. 


ஆனாலும் தேர்வில் காப்பியடிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வருவதுபோல் ப்ளூ டூத்தில் கேட்டு காப்பியடிப்போரும் உண்டு. ஹைடெக் காப்பியடிப்போராக இருந்தாலும் சரி பிட்டடிப்போராக இருந்தாலும் சரி அதனால் வரும் மதிப்பெண் வாழ்க்கையில் எந்த பலனையும் தரப்போவதில்லை என்று உணர்ந்தால் சரி.