பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மத ஊர்வலம் நடைபெற்று கொண்டிருக்கும்போது அதன் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.


வடக்கு பீகார் மாவட்டத்தின் தேஸ்ரி காவல் நிலையப் பகுதியில் மாநிலத் தலைநகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் இரவு 9 மணியளவில் விபத்து நிகழ்ந்தது. சாலையோரத்தில் உள்ள அத்தி மரத்தின் முன் கூடியிருந்த மக்கள் உள்ளூர் தெய்வமான பூமியா பாபாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் மீது லாரி மோதியது.


இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "பீகார் மாநிலம் வைஷாலியில் நடந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு என் அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.


 






இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF (பிரதமரின் தேசிய நிவாரண நிதி)யிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.


குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், விபத்து பற்றிய செய்தி வேதனையளிப்பதாக தெரிவித்திருந்தார். மஹுவா சட்டப்பேரவை தொகுதியின் கீழ் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த தொகுதியின் எம்எல்ஏ முகேஷ் ரூஷன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். 


"குறைந்தது ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலர் ஹாஜிபூரில் உள்ள சதர் மருத்துவமனைக்கு (மாவட்டத் தலைமையகம்) கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கொண்டு செல்லும்போது மூவர் இறந்தனர். நிலைமை மோசமாக உள்ளவர்கள் பாட்னாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்" என முகேஷ் ரூஷன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து வைஷாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணீஷ் குமார் கூறுகையில், "திருமணங்கள் தொடர்பான வழக்கத்தின் ஒரு பகுதியாக ஊர்வலம் நடத்தப்பட்டது. அருகில் உள்ள சுல்தான்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒருவரின் வீட்டில் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. 


மஹ்னார்-ஹாஜிபூர் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிரக் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அவர் விபத்தில் சேதமடைந்த வாகனத்திற்குள் சிக்கிக் கொண்டார். அவர் இறந்திருக்கலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்" என்றார். பலியானவர்களில் குறைந்தது நான்கு குழந்தைகள் இருக்கலாம் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.


சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் தாமதமாக வந்ததாகக் கூறி மக்கள் அங்கு கோஷம் எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் விதிமுறைகளின்படி இழப்பீடு விரைவாக வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.