மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ள அஜாஸ் கான் என்னும் வேட்பாளர், தேர்தலில் வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசத்திற்கு பிறகு நாட்டில் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் மகாராஷ்ட்ராவில் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
மகாயுதி Vs மகாவிகாஸ் அகாதி கூட்டணி
பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியோர் இணைந்து, மகாயுதி கூட்டணியாக அணிசேர்ந்து போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆகக் களம் கண்டனர்.
இவர்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ள அஜாஸ் கான் என்னும் வேட்பாளர், தேர்தலில் வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் புகழ் அஜாஸ் கான்
வெர்சோவா தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் அஜாஸ் கான் போட்டியிட்டார். நடிகரான அஜாஸ் கான், இந்தி பிக் பாஸில் கலந்துகொண்டவர். இன்ஸ்டாகிராம் ஆளுமையான இவரை, 56 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
வெர்சோவா தொகுதியில் போட்டியிட்ட அஜாஸ் கான், வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. . நோட்டாவே இவரைப் பின்னுக்குத் தள்ளி, 1,298 வாக்குகளைப் பெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வி
ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலிலும் அஜாஸ் கான் தோல்வியையே தழுவி இருந்தார். மும்பை வடக்கு மத்திய தொகுதியில் போட்டியிட்ட அஜாஸ், சொல்லிக்கொள்ளும் படியான வாக்குகளைப் பெறவில்லை.