குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் வருகின்ற டிசம்பர் 12ம் தேதி பதவி ஏற்கிறார். குஜராத்தில் மீண்டும் 7வது முறையாக ஆட்சியை கைப்பற்ற உள்ள பாஜக அறிவித்துள்ளது.
குஜராத்தின் 17வது முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், கட்லோடியா எம்.எல்.ஏவுமான பூபேந்திர படேல் வருகின்ற டிசம்பர் 12ம் தேதி (திங்கள்கிழமை) பதவியேற்கிறார்.
182 சட்டபேரவை தொகுதிகள் கொண்ட குஜராத்தில் பாஜக தற்போது வரை 154 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த முன்னிலையானது கடந்த தேர்தல் முடிவுகளை விட அதிகமாகும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் தரவுகள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 12ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்கின்றன.
தொடர்ந்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் பேசுகையில், “குஜராத் தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாக உள்ளன. குஜராத்தின் வளர்ச்சி பயணத்தை மேலும் தொடர மக்கள் முடிவு செய்துள்ளனர். மக்களின் ஆணையை நாங்கள் பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவின் ஒவ்வொரு தொழிலாளியும் பொது சேவையில் உறுதியாக உள்ளோம்” என்றார்.
பூபேந்திர படேல் அரசியல் பயணம்:
பூபேந்திர படேலின் ஆதரவாளர்களால் ‘தாதா' என்று அன்புடன் அழைக்கப்படும் பூபேந்திரபாய் ரஜினிகாந்த்பாய் படேல் தற்போது குஜராத்தின் 17வது முதலமைச்சராக உள்ளார்.
அகமதாபாத்தில் பிறந்த படேல், கடந்த 2017 ஆம் ஆண்டு 1,17,000 வாக்குகள் வித்தியாசத்தில் கட்லோடியா பகுதியில் வெற்றிபெற்றார். இதுவே காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் பட்டேலை தோற்கடித்த மிகப்பெரிய வாக்கு வித்தியாசம் இதுவாகும். கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலின்போது கட்லோடியா தொகுதியில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்.
பூபேந்திர படேல் ஏற்கனவே அகமதாபாத் மாநகராட்சி கவுன்சிலராக பணியாற்றியுள்ளார். சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்ற படேல், அகமதாபாத் மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (AUDA) நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
1995 முதல் தேர்தலில் தோல்வியடையாமல் 27 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிஜேபி தற்போது மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது.