Bharatiya Anthariksh Station: அறிவியல் ஆராய்ச்சிக்கான இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் 2028-ம் ஆண்டில் முதல் தொகுதியானது தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்வெளி நிலையம்:


மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ககன்யான் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் வகையில், பாரதிய விண்வெளி நிலையத்தின் முதல் பிரிவை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாரதிய விண்வெளி நிலையத்தின் (பிஏஎஸ்-1) முதல் தொகுதியை மேம்படுத்தவும், கட்டமைப்பதற்கும், இயக்குவதற்கும் பல்வேறு தொழில்நுட்பங்களை செயல்விளக்கம் செய்து சரிபார்க்கும் இயக்கங்களை மேற்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


 பாரதிய விண்வெளி நிலையம் மற்றும் முன்னோடி இயக்கங்களுக்கான புதிய மேம்பாடுகள் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள ககன்யான் திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான கூடுதல் தேவைகளை உள்ளடக்கும் வகையில் ககன்யான் திட்டத்தின் நோக்கம் மற்றும் நிதியுதவியை மாற்றியமைத்தல் இதில் அடங்கும்.


முதல் அலகு 


ககன்யான் திட்டத்தில் திருத்தம், பாரதிய  விண்வெளி நிலையத்திற்கான வளர்ச்சி மற்றும் முன்னோடி இயக்கங்களின் நோக்கத்தை உள்ளடக்கியது. மேலும், ஒரு கூடுதல் ஆளில்லா இயக்கம் மற்றும் தற்போதைய ககன்யான் திட்டத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் வன்பொருள் தேவைகளை கருத்தில் கொண்டது. இப்போது தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயல்விளக்கத்தின் மனித விண்வெளிப் பயணத் திட்டம், எட்டு பயணங்கள் மூலம் பாரதிய விண்வெளி நிலையம்-1-ன் முதல் அலகு ஏவுவதன் மூலம் 2028 டிசம்பருக்குள் முடிக்கப்பட உள்ளது.


விண்ணில் ஆராய்ச்சி:


2018 டிசம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ககன்யான் திட்டம், மனிதர்களை குறைந்த புவி வட்டப்பாதைக்கு (LEO) அனுப்பவும், நீண்ட கால அடிப்படையில் இந்திய மனித விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களுக்கு அடித்தளம் அமைக்கவும் வகை செய்கிறது. 2035-ம் ஆண்டுக்குள் செயல்படும் பாரதிய விண்வெளி நிலையத்தை உருவாக்குவது, 2040-க்குள் இந்திய விண்வெளி இயக்கம் ஆகியவற்றை உருவாக்குவது என்பது அமிர்த காலத்தில் விண்வெளிக்கான தொலைநோக்கு பார்வையில் அடங்கும். அனைத்து முன்னணி விண்வெளி பயண நாடுகளும் நீண்ட கால மனித விண்வெளி பயணங்களுக்கும், சந்திரனுக்கும் அதற்கு அப்பாலும் மேலும் ஆய்வு செய்வதற்கும் தேவையான திறன்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் கணிசமான முயற்சிகளையும் முதலீடுகளையும் செய்து வருகின்றன.






ககன்யா திட்டம்:


ககன்யான் திட்டம் என்பது இஸ்ரோவின் தலைமையில் தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் பிற தேசிய முகமைகளுடன் பங்குதாரர்களாக செயல்படும் ஒரு தேசிய முயற்சியாக இருக்கும். இஸ்ரோவில் நிறுவப்பட்ட திட்ட மேலாண்மை பொறிமுறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். நீண்ட கால மனித விண்வெளி பயணங்களுக்கான முக்கியமான தொழில்நுட்பங்களை உருவாக்கி நிரூபிப்பதே இலக்கு. இந்த இலக்கை அடைய, இஸ்ரோ 2026 ஆம் ஆண்டுக்குள் நடைபெற்று வரும் ககன்யான் திட்டத்தின் கீழ் நான்கு திட்டங்களையும், 2028 டிசம்பருக்குள் பாரதிய விண்வெளி நிலைய அமைப்பின் முதல் தொகுதி மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களை சரிபார்ப்பதற்கான நான்கு இயக்கங்களையும் மேற்கொள்ளும்.


ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தில் ₹11,170 கோடி நிகர கூடுதல் நிதியுடன், திருத்தப்பட்ட நோக்கத்துடன் ககன்யான் திட்டத்திற்கான மொத்த நிதி Rs.20,193 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.