Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
Chandrayaan 4 Mission Approved : சந்திராயன் 4 , வெள்ளி கோளுக்கு செயற்கைக்கோள் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விண்வெளி தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோவின் அடுத்தகட்ட பயணம் குறித்து தெரிந்து கொள்வோம்.
இஸ்ரோ திட்டம்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. சமீபத்தில், சந்திராயன் 3 திட்டம் மூலம், நிலவின் யாரும் செல்லாத தென் பகுதிக்குச் சென்று முதல் நாடு என்ற சாதனையை படைத்தது. மேலும் செவ்வாய் கோளுக்கு, குறைந்த செலவில் மங்கள்யான் செயற்கைக்கோளை அனுப்பி சாதனை படைத்தது. மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நிலாவில் மனிதன்:
இந்நிலையில் இஸ்ரோவின் அடுத்தகட்ட பயண திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சந்திராயன் 4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முறை மனிதர்களை நிலாவுக்கு இஸ்ரோ அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி கோள்:
இதையடுத்து, வெள்ளி கோளுக்கும் செயற்கை கோளை அனுப்பும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டமானது ரூ. 1236 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்றும், 2028 ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ. 20, 193 கோடியில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சந்திராயன் திட்டம்:
நிலவின் தென் துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்களில் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம்.
முக்கியமாக நிலவின் தென்துருவத்தில் மேற்பரப்பில் சில கனிமங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளது. அதாவது, நிலவில் சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
இந்நிலையில், சந்திராயன் 4 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப நாசா பல வருடங்களாக முயற்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.