Bharat Jodo Yatra:  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேறவுள்ளார்.


காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.


12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 60  நாட்களைக் கடந்துள்ள இந்த பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா வழியாக இன்று தலைநகர் டெல்லியை அடைந்துள்ளது. 


இந்த யாத்திரையில் பல்வேறு அரசியக் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவளித்து வருகின்றனர். இதில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பங்கேற்கிறார். இது குறித்து ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், பாரத் ஜூடோ யாத்திராவில் கலந்து கொள்ளும்படி திரு ராகுல் காந்தி எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல் தன்னை ஒரு சக குடிமகன் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒரு இந்தியனாக இழந்து கொண்டிருக்கும் மாண்புகளை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக நான் இதைக் கருதுகிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இந்த முன்னெடுப்பில், தலைநகரில் வாழும் தமிழர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை, விருப்பம். இது தேசத்திற்கான ஒரு நடைப்பயணம். கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. டிசம்பர் 24அன்று நடக்கும்  இந்த யாத்திரையில் நான் தலைநகருக்கு வருகிறேன். உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். வாருங்கள் புதிய இந்தியா படைப்போம். நாளை நமதே ஜெய்ஹிந்த்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். 






காங்கிரஸ் -  மநீம கூட்டணி..?


தமிழ்நாட்டில் தி.மு.க. -வின் செயல்பாடுகளை பெரிதாக விமர்சிக்காமல் இருக்கும் மக்கள் நீதி மய்யம், ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கட்சி தலைவர் பங்கேற்க இருப்பது கூட்டணி முடிவாக இருக்கக் கூடுமோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மக்கள் நீதி மய்யம் எந்த கட்சியோடும் கூட்டணி இல்லை என்ற முடிவிலேயே இருக்கிறது. மாற்றத்திற்காக செயல்படுகிறோம் என்று சொல்லும் கட்சி கடந்த தேர்தலின்போதும் தனித்து நின்றது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணியில் உள்ளது. தற்போது ராகுல் உடன் ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்பது புதிய கூட்டணிக்கான தொடக்கமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.