அவுரங்காபாத், மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றபோது, தமிழகத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர் உயிரிழந்தார். அவருடன் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் காயமடைந்தார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்கத் திட்டமிட்டு, அதன்படி, தற்போது பயணித்து வருகிறார். 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது..
60 நாட்களைக் கடந்துள்ள இந்த பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் நுழைந்த ராகுல்காந்திக்கும் அவருடன் தொடர்ந்து பயணிக்கும் நூற்றுக்கணக்கான தொண்டர்களுக்கும், மகாராஷ்டிரா காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வியாழன்மாலை, நாந்தேட்டில் நடந்த ராகுல் காந்தியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, யாத்திரையின் இரவு முகாமிற்காக அர்த்தபூர் தெஹ்சில் (Ardhapur tehsil) உள்ள பிம்பால்கான் மஹாதேவ் கிராமத்திற்கு(Pimpalgaon Mahadeo village) ராகுல்காந்தியுடன் யாத்திரையின் தொடக்கத்தில் இருந்து நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ள தமிழகத்தைத் சேர்ந்த கணேசனும் அவரது நண்பரும் சென்ற போது, இரவு 8.20 மணியளவில் திடீரென லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இறந்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த கணேசன் பொன்ராமன் என அடையாளம் காணப்பட்டதாகவும், அவருடன் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த சயாயுல் (30) என்ற மற்றொரு யாத்ரிக்கும் விபத்தில் லேசான காயம் ஏற்பட்டது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது முகநூல் பதிவில், “எங்கள் சக யாத்ரி கணேசனின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக கட்சியின் ஒவ்வொரு யாத்திரையிலும், பிரச்சாரத்திலும் பங்கேற்ற அவர், காங்கிரஸில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். கட்சியின் உண்மையான சிப்பாயையும், பாரத் ஜோடோ யாத்ராவின் அன்பான தோழரையும் இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். மேலும், தேசத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்குமான கணேசனின் தொடர் அர்ப்பணிப்பு, நமது நாட்டை ஒன்றிணைக்கும் முயற்சியில் நம் அனைவருக்கும் உத்வேகமாக இருக்கும்" என்றும் ராகுல்காந்தி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கணேசனின் மறைவு, ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ள ராகுல் காந்தி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளுக்கும் தொடர்ந்து பங்கேற்கும் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் கணேசன் போன்ற தொண்டர்களின் அர்ப்பணிப்பு தரும் உத்வேகத்துடன், நாட்டில் ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான இந்தப் பயணம் தொடர்கிறது என காங்கிரஸ் அறிவித்துள்ளது, அடுத்து, மகாராஷ்டிாவின் ஹிங்கோலி மாவட்டத்திற்குச் செல்லும். காங்கிரஸின் வெகுஜன தொடர்பு முயற்சியான இந்த யாத்திரை, மகாராஷ்டிாவின் 14 நாள் பயணத்தில், 15 சட்டமன்ற மற்றும் 6 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக பயணிக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் 382 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் காங்கிரஸின் ஒற்றுமை யாத்திரை வரும் 20 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நுழைகிறது.