காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை திங்கள்கிழமை (09/01/2023) அனைத்து பெண்களும் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொள்வார்கள் என்று அக்கட்சியின் எம்பி ஜோதிமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ள டிவிட்டர் பதிவில், 


"நாளை அனைத்து பெண்களும் பாரத் ஜோடோ யாத்ராவில் நடக்க வேண்டும். இந்த இந்திய ஒற்றுமை பயணத்தில் மிகவும் உற்சாகமான நாளில் இதுவும் ஒன்று. ராகுல் காந்தி, பெண்கள் அதிகாரம் பெறுவதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறார், அதை அவர் எதிர்ப்பார்க்கிறார்!"  என பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்தார், பின்னர் அதை ஜெய்ராம் ரமேஷ்  ரீ-ட்வீட் செய்தார்.
இதற்கு முன்னர், டிசம்பரில், ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தின் பீபுல்வாடாவை நோக்கி இந்திய ஒற்றூமை யாத்திரை சென்றபோது, ​​காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மகிளா சசக்திகரன் திவாஸ் விழாவில், பெண்களுடன் பாரத் ஜோடோ யாத்திரையின் பயணத்தைத் தொடர்வதன் மூலம் அந்த நாளைக் கொண்டாடினார். அதேபோல், நவம்பர் 19 அன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் இதேபோன்ற நிகழ்வு இந்திய ஒற்றுமை யாத்திரையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  இந்த யாத்திரை நேற்று ஹரியானா மாநிலத்தின் குருக்ஷேத்திரத்தை அடைந்தது.


கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் யாத்ராவை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். அன்று தொடங்கிய பயணம் இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா டெல்லி மாநிலங்களை கடந்து நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. 






மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி, கடந்த  செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்கத் திட்டமிட்டு, அதன்படி, தற்போது பயணித்து வருகிறார்.


12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்திய வரலாற்றில் எந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் இவ்வளவு நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டதில்லை என்றும் இதுவே மிக நீண்ட நடைப்பயணம் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.  ஜனவரி 26 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடையும் யாத்திரைக்குப் பிறகு, இந்த பயணத்தின் நோக்கத்தை அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்வதற்காக 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கும். 


முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின்  சகோதரியும் ஏஐசிசி தேசிய பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ராவிடம், பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, நாடு முழுவதும் 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பிரச்சாரத்தை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின், இரண்டு மாத காலம் 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பிரசாரத்தை, காங்கிரஸ் தொடங்கும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.