பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 77.8 சதவீதம் என பாரத் பயோக் டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில், பாரத் பயோக் டெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியை, அவசர காலத்துக்கு கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியது.
முழுமையான 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பே, கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக பலதரப்பட்ட மருத்துவ நிபுணர்களும், அமைப்புகளும் கருத்து தெரிவித்து வந்தனர். இதன்காரணமாக, மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வந்தனர்.
பொது மக்களிடையே நிலவு கோவாக்சின் தொடர்பான தயக்கத்தை போக்க, பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தவணை கோவாக்சின் ஊசியைப் போட்டுக் கொண்டார். இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோ டெக் நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தியாவில் 25,800 தன்னார்வலர்களிடம் இந்நிறுவனம் மேற்கொண்டது.
கோவாக்சின் செயல்திறன்:
லேசானா மற்றும் மிதமான கொரோனா அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி 77.8% பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. தீவிரமான கொரோனா அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு 93.4% பாதுகாப்பு கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது உலகில் மிகத் தீவிரமாக பரவிவரும் டெல்டா வகை தொற்றுக்கு எதிராக 65.2% பாதுகாப்பை தருவதாகும் கூறப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் எலிகள், முயல்கள் போன்ற பல்வேறு விலங்கு இனங்களில் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத் தரவை உருவாக்கி ஆய்வுகளை நடத்தியது. 3ம் கட்ட மனித பரிசோதனை, இந்தியாவில் 25,800 தன்னார்வலர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் 22,500 பேருக்கு , கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பு உறுதி (safety data including Serious Adverse Event data) செய்யப்பட்டது. இந்த தரவுகளின் அடிப்படையில் தான் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
மற்ற தடுப்பூசிகளின் செயல்திறன்:
ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி ஏறத்தாழ 43,000 பேர் பங்கேற்ற சோதனைகளில் COVID 19 ஐ தடுப்பதில் தடுப்பூசி 90% பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மாடர்னா தடுப்பூசி: சுமார் 30,000 பேர் ஈடுபட்ட மருத்துவ பரிசோதனைகளில் இந்த தடுப்பூசி 94.5% பயனுள்ளதாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
ரஷ்யாவின் ஸ்பூட்னிக்.வி தடுப்பூசி தடுப்பூசி கொரோனா பாதிப்பைத் தடுப்பதில் 92% பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி 20,000 தன்னார்வலர்களுடன் சோதனைகளை மேற்கொண்டது. இந்த தடுப்பூசி 90% பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 1600 பங்கேற்பாளர்களிடம் 2 மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்த இந்திய சீரம் மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளும் தாக்கல் செய்யப்பட்டன. இது வெளிநாட்டு ஆய்வுகளுடன் ஒப்பிடும் வகையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து,சீரம் நிறுவத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய சுகாதார துறை ஒப்புதல் வழங்கியது.