பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை பெருமை அடையச் செய்ய கூடியவர் பக்வந்த் மான் என்றும், ஆம் ஆத்மி கட்சியில் தொலைபேசி மூலம் கருத்து கேட்டு பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதாகவும் கெஜ்ரிவால் தகவல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பக்வந்த் மான், பஞ்சாப் மாநிலம் சங்குரூர் தொகுதியில் எம்.பியாக இருந்து வருகிறார்.
முன்னதாக, இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே மீண்டும் கொரோனா தொற்றின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சாப், உ.பி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுமா..? அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்தநிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. அதன் அடிப்படையில், கோவா – 40,பஞ்சாப்-117, உத்தரகாண்ட்-70, மணிப்பூர்-60, உ.பி – 403 இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலானது பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், ஸ்ரீகுருரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு பதிலாக பஞ்சாப் தேர்தல் வரும் பிப்ரவரி 20-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை வென்று அமரீந்தர் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, 2 வது இடத்தில் ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் சட்டபேரவை தேர்தலில் தற்போது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலிதளம், பாஜக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அமீர்ந்தர்சிங்கின் லோக் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்