சீனாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா:


சமீபத்தில், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சீனாவிற்கு தொழில் பயணமாக சென்றுள்ளார். இதையடுத்து, மூன்று நாள்களுக்கு முன்பு டிசம்பர் 23ஆம் தேதி அவர் ஆக்ரா திரும்பியுள்ளார். அவருக்கு தனியார் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.


இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு ஆய்வகம் தகவல் தெரிவித்துள்ளது. அதையடுத்து, அவரின் வீட்டுக்கு அவசர குழு சென்றுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.


மீண்டும் அச்சுறுத்தல்:


கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடி கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.


அறிவியல் உலகின் தொடர் முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது கட்டுப்பாட்டில் வரவழைக்கப்பட்டது. கொரோனா எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இருந்தபோதிலும், பல மாதங்களாக சீனாவில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இதை தொடர்ந்து, பொருளாதார தாக்கத்தின் காரணமாகவும் மக்கள் போராட்டத்தின் விளைவாகவும் பூஜ்ய கொரோனா கட்டுப்பாடுகள் அங்கு திரும்பபெறப்பட்டது. 


சீனாவில் உச்சகட்டம்:


இதன் எதிரொலியாக, சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


இதற்கு மத்தியில், இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்தில் இருந்து வரும் அனைவருக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படுவதை இந்தியா கட்டாயமாக்கியுள்ளது.


தடுப்பு நடவடிக்கைகள்:


மேலும், இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா? என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் பயற்சி சோதனை நடத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.


இந்த பயற்சி சோதனை வரும் செவ்வாய்கிழமை நடத்தப்பட உள்ளது. அதில், சுகாதார மையங்களில் போதுமான படுக்கைகள் இருக்கிறதா, நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா? ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா? ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும்.