பெங்களூருவில் பள்ளி மாணவியின் தந்தையை மிரட்டி பணம் கேட்டதாக பெண் ஆசிரியர், அவரது கூட்டாளிகள் இருவரை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கேட்ட பணத்தை தரவில்லை என்றால் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் எனக் கூறி, மாணவியின் தந்தையை பெண் ஆசிரியர் மிரட்டியுள்ளார்.
பிளாக்மெயில் செய்த பெண் ஆசிரியர்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வருபவர் சதீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிசினஸ் செய்து வரும் இவர், தன்னுடைய மூன்றாவது பெண் குழந்தையை கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு பள்ளியில் சேர்த்துள்ளார்.
இந்த பள்ளியில்தான் ஸ்ரீதேவி ருதகி (இவருக்கு வயது 25) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். பள்ளி அட்மிஷன்போதுதான், ஸ்ரீதேவியை சதீஷ் முதன்முதலில் சந்தித்துள்ளார். அதன்பிறகு, இருவரும் பேசி, பழக தொடங்கியுள்ளனர்.
ஸ்ரீதேவியுடன் பேச தனி சிம் கார்டு மற்றும் போனை வாங்கும் அளவுக்கு இருவரின் உறவு சென்றுள்ளது. அதன் மூலம் அடிக்கடி மெஸேஜ், வீடியோ கால் செய்து பேசியுள்ளனர். இருவரும் நெருக்கமாக பழகி இருக்கின்றனர். இதையடுத்து, சதீஷிடம் பணம் கேட்டு மிரட்ட தொடங்கியுள்ளார் ஸ்ரீதேவி.
மாணவியின் தந்தை உடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?
முதலில் 4 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். பின்னர், ஜனவரி மாதம், அவர் ரூ.15 லட்சம் கேட்டிருக்கிறார். பணம் கொடுக்க தயங்கியுள்ளார். பின்னர், 50,000 ரூபாய் கடன் வாங்குவதாக கூறி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் ஸ்ரீதேவி.
ஆனால், சதீஷின் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு கடினமான முடிவை எடுத்திருக்கிறார் சதீஷ். குடும்பத்துடன் குஜராத்தில் இடம்பெயர முடிவு செய்தார். இதற்கு, குழந்தையின் டிசி தேவைப்பட்டுள்ளது. எனவே, டிசி வாங்குவதற்கு மார்ச் மாதம், பள்ளிக்கு சென்றுள்ளார்.
அங்குதான், சண்டை வெடித்துள்ளது. ஸ்ரீதேவி உடன் அவரது கூட்டாளிகள் கணேஷ் மற்றும் சாகர், சேர்ந்து சதீஷ் உடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ரூ. 20 லட்சம் கொடுக்காவிட்டால் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டினர்.
தனது நற்பெயருக்கும் குடும்பத்தின் நலனுக்கும் பயந்து, ராகுல் ஆரம்பத்தில் ரூ.1.9 லட்சம் கொடுத்தார். ஆனால், மிரட்டல்கள் தொடர்ந்துள்ளன. கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி, மீதமுள்ள தொகையைக் கேட்டுள்ளார் ஸ்ரீதேவி. முன்னாள் காவல் உதவி ஆணையர் என்று கூறப்படுபவருக்கு ரூ.5 லட்சம், சாகருக்கும் கணேஷுக்கும் தலா ரூ.1 லட்சம், தனக்கு ரூ.8 லட்சம் கேட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில், மிரட்டலை தாங்கி கொள்ள முடியாமல் உதவிக்காக காவல்துறையை நாடியுள்ளார் சதீஷ். போலீசார் விரைவாக செயல்பட்டு, ஸ்ரீதேவி, கணேஷ் மற்றும் சாகர் ஆகியோரைக் கைது செய்தனர்.
விசாரணையில், மல்லேஸ்வரம் முன்னாள் ஏசிபி ஒருவருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஸ்ரீதேவி பொய்யாகக் கூறி, ராகுலை மிரட்ட முயற்சித்ததாக தெரியவந்தது. ஆனால், இந்த வழக்கில் ஏசிபிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று போலீசார் தெளிவுபடுத்தினர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.