பெங்களூரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் இருந்து தவறுதலாக கீழே விழுந்த 20 வயது கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.
பெங்களூர் ஃப்ரேசர் டவுன் பகுதியை சேர்ந்தவர் லியா ரெஜினா. இவரது தந்தை துபாயில் உள்ள ஒரு ட்ராவல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் கிறிஸ் பீட்டர். இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று தனது நண்பருக்கு பிறந்தநாள் பரிசு வாங்க பெங்களூர் பிரிகேட் சாலையில் உள்ள பிரபல ஷாப்பிங் காம்ப்ளக்ஸூக்கு சுமார் 2 மணியளவில் சென்றுள்ளனர்.
அங்கு சென்று பரிசை வாங்கிய இருவரும் அதன் பின்னர் 2 ஆவது மாடியின் படிக்கட்டில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது லியா கால்கள் தடுமாறி ஜன்னல் வழியாக கீழே விழ முற்பட்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிறிஸ் அவரை உள்ளே இழுக்க முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவரும் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இருவரும் மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.
இந்த விபத்தில் லியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பீட்டருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதில் லியா சிகிச்சை பலன்றி உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை ஆராய்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்