Bengaluru Rains: கர்நாடகாவில் மழைநீர் வெள்ளம் வெளியேற இடையூறாக இருக்கும் வீடுகள் மற்றும் கட்டடங்களை தயவு தாட்சண்யமின்றி இடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்களுக்கு விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது.
இதனையடுத்து பெங்களூருவின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெளியேற வழியின்றி வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை இந்த வெள்ளம் சூழ்ந்த நிலையில், ரப்பர் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகரின் பல முக்கிய சாலைகளில் நீர்தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது வரை நகரின் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
முன்னதாக ஏரிகள் நிரம்பி மழைநீர் வெள்ளத்தில் மீன்கள் சாலைகளுக்கு அடித்து வரப்பட்டன. இதனையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் பெங்களூரு மாநகராட்சியை கடுமையாக விமர்சித்தும் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்ந்தும் வருகின்றனர்.
பெங்களூரு நகரின் பல பகுதிகளும் கடந்த 2 நாள்களாக மழைநீர் வெள்ளத்தால் ஸ்தம்பித்துள்ள இந்த இக்கட்டான சூழலில், மழைநீர் வடிகால்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களை போர்க்கால அடிப்படையில் அதிரடியாக இடிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கர்நாடக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த இடிப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னதாகப் பேசியுள்ள அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், வெள்ள நீர் வெளியேற சொத்துக்கள் தயவுதாட்சண்யமின்றி இடிக்கப்படும். இது கர்நாடக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தெளிவாக உள்ளது. நாங்கள் யாருக்கும் சம்மன் அளிக்க வேண்டியதில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் மாநகராட்சி இந்தப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கும். பணியாளர்களை எந்த தொலைபேசி அழைப்புகளையும் ஏற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். அரசின் இந்த அதிரடி உத்தரவால் பொதுமக்கள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர். வசிக்கும் வீட்டுக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்று அச்சத்தில் உள்ளனர்
பெங்களூருவின், சரஜ்புரா பகுதியில் கட்டப்பட்டுள்ள வீட்டுமனை குடியிருப்பு பகுதிகளில் முன்னதாக வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், அப்பகுதியில் மழைநீர் வடிகால்களில் மீது கட்டப்பட்டுள்ள ரெயின்போ டிரைவ் லே-அவுட்டைச் சேர்ந்த 20 வீடுகள் மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பகுதியில் உள்ளசன்னிபுருக்ஸ் லே அவுட்டிலும் மழைநீர் புகுந்தது. இதனால் இந்த லே-அவுட்களில் வசித்து வந்த மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
இந்த வெள்ளப் பெருக்கு, மழைநீர் தேக்கம் குறித்த உயர்மட்டக் கூட்டத்துக்குப் பிறகு நகரில் புதிய வாய்க்கால்களுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்றும் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.