கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 'நம்ம மெட்ரோ’ ரயில் செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.


பெங்களூரு மெட்ரோ ரயலில் மீண்டும் சர்ச்சை:


இந்த நிலையில், சட்டை பட்டன் அணியாத காரணத்தால் பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணிக்க இளைஞர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொட்டகல்லாசந்திரா மெட்ரோ நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு, சட்டையில் உள்ள பட்டனை அணிந்தவாறு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வர வேண்டும் என அந்த நபரிடம் பெங்களூரு மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இல்லை என்றால், மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவுறுத்தியுள்ளனர்.


இதற்கிடையில், இந்த விவகாரத்தில் சக பயணிகள் தலையிட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர் இந்த சம்பவத்தை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். சமீபத்தில், இதேபோன்ற மற்றொரு சம்பவம் பெங்களூரு ரயில் நிலையத்தில் நடந்தது.


பயணி அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?


ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதியவரின் (விவசாயி) ஆடைகள் அசுத்தமாக இருப்பதாக கூறி, அவரை ரயிலில் பயணிக்க ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் இணையத்தில் பேசும் பொருளானது. இதுகுறித்து பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், "இன்னும் ஒரு ஆடை தொடர்பான சர்ச்சை சம்பவம் இப்போது என் முன்னால் நடந்தது.


தொழிலாளி ஒருவர் நிறுத்தப்பட்டு, சட்டையில் உள்ள பட்டனை தைக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளார். நம்ம மெட்ரோ எப்போது இப்படி ஆனது?" என பதிவிட்டுள்ளார். தென் பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி சூர்யாவையும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தையும் அந்த பயணி டேக் செய்துள்ளார்.  


இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள பெங்களூரூ மெட்ரோ ரயில் அதிகாரி, "ஏழை, பணக்காரர், ஆண், பெண் என்ற அடிப்படையில் பயணிகளிடம் வேறுபாடு காட்டப்படாது. குறிப்பிட்ட அந்த பயணி, குடிபோதையில் இருந்ததாக அதிகாரிகள் சந்தேகித்தனர்.


 






மேலும் மெட்ரோவில் பயணம் செய்யும் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக அவர் நிற்க வைக்கப்பட்டார். பரிசோதனைக்கு பின், அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்" என தெரிவித்தது.