சமீபகாலமாக உணவுப் பொருட்களில் தேவையற்ற பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட தெலங்கானாவில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் ஐஸ்கிரீமில் விந்தணுவை கலந்து விற்பனை செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தம்:
இந்த நிலையில், அதேபோன்று மோசமான சம்பவம் ஒன்று புனேவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் வாகன தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு எஸ்.ஆர்.ஏ. என்ற தனியார் நிறுவனத்தினர் சிற்றுண்டி விநியோகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்கள் வழங்கி வந்த சிற்றுண்டியில் பேண்டேஜ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக்கண்ட தொழிற்சாலை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை வாகன தொழிற்சாலை ரத்து செய்தது. இதையடுத்து, கேடலிஸட் செர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அந்த நிறுவனத்தினர் தொழிற்சாலைக்கு உணவு வழங்கும் ஒப்பந்தத்தை மனோகர் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கினர்.
சமோசாவில் ஆணுறை:
இவர்கள் முறையாக அந்த நிறுவனத்திற்கு சமோசா உள்ளிட்ட சிற்றுண்டி வழங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வழக்கம்போல தொழிற்சாலை ஊழியர்களுக்கு சிற்றுண்டியாக சமோசா வழங்கப்பட்டது. ஆனால், சமோசாவை சாப்பிட்ட ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. சமோசாவில் ஆணுறை, குட்கா மற்றும் கற்கள் இருந்துள்ளது. இதனால், தொழிற்சாலை ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, சிக்ளி காவல் நிலையத்தில் தொழிற்சாலை சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. வாகன தொழிற்சாலைக்கு முதலில் சிற்றுண்டி விநியோகித்த எஸ்.ஆர்.ஏ. என்டர்பிரைசஸ் நிறுவனத்தினர் தங்களது ஒப்பந்தம் ரத்தானதால் தொழிற்சாலை நிர்வாகம் மீது கோபத்தில் இருந்துள்ளனர். மேலும், புதியதாக ஒப்பந்தம் பெற்ற மனோகர் என்டர்பிரைசஸ் நிறுவனம் மீதும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
காரணம் என்ன?
இதனால், இரு நிறுவனத்தையும் பழிவாங்க எஸ்.ஆர்.ஏ. நிறுவனத்தின் உரிமையாளர்கள் 3 பேரும் சதித்தீட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக, அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஃபிரோஸ் ஷைக் மற்றும் விக்கி ஷைக் இருவரையும், புதியதாக ஒப்பந்தம் பெற்ற மனோகர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பணியில் சேர வைத்துள்ளனர்.
அவர்கள் இருவரும் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்ட சமோசாவின் உள்ளே ஆணுறை, கற்கள், குட்காவை வைத்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்த பிறகு, இந்த சதித்திட்டத்திற்கு மூளையாக இருந்த ரஹீம் ஷைக், அசார் ஷைக் மற்றும் மலார் ஷைக் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். புதியதாக ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்திற்கு அவப்பெயர் உண்டாக்கி அவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைக்கவே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் கூறினர். ஒரு நிறுவனத்தை பழிவாங்குவதற்காக சமோசாவில் ஆணுறை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.