பெங்களூரு இந்திராநகரில் நகைக்காகப் பெண் ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டி, பிணைக்கைதியாகப் பிடித்த நபரை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் இணைந்து பிடித்துள்ளனர். கடையில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்றபோது, அவரது கைகளை ஃபெவிக்விக் மூலம் ஒட்டவைத்து, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

ஃபெவிக்விக் மூலம் திருட்டு முயற்சி

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் இந்திராநகர் பகுதியில் உள்ள 100 அடி சாலையில், ஷூ மற்றும் பைகள் பழுதுபார்க்கும் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி காலை 11.45 மணியளவில், இந்தக் கடையில் 23 வயதான ஜெயஸ்ரீ என்ற பெண் ஊழியர் தனியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஹெல்மெட் மற்றும் கையுறைகள் அணிந்தபடி கடைக்குள் நுழைந்த பிரபுராஜ் என்ற 40 வயது நபர், தன்னை யாரோ கொலை செய்யத் துரத்துவதாகக் கூறி அந்தப் பெண்ணிடம் உதவி கேட்டுள்ளார். பின்னர், திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது தங்கச் சங்கிலியைக் கேட்டுள்ளார்.

Continues below advertisement

பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது கைகளை ஃபெவிக்விக் மூலம் மேசையில் ஒட்டவைத்து, வாயில் துணியைத் திணித்துள்ளார். தொடர்ந்து, சுமார் 35 கிராம் எடையுள்ள, ரூ.4.5 லட்சம் மதிப்புடைய தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளார்.

மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

கைகளை விடுவித்த ஜெயஸ்ரீ, உதவி கேட்டு சத்தமிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் இருந்த கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். கூட்டத்தைக் கண்ட பிரபுராஜ், பெண்ணின் தலைமுடியைப் பிடித்து மீண்டும் கடைக்குள் இழுத்துச் சென்று, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். தன்னை நெருங்கினால் பெண்ணைக் கொலை செய்துவிடுவதாகவும் எச்சரித்துள்ளார்.

இதையடுத்து, பொதுமக்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பெண்ணை விடுவிக்க முயன்றனர். அப்போது, கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்களை நோக்கி கத்தியால் தாக்க முயன்ற பிரபுராஜ், அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

தப்பியோடிய பிரபுராஜை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் துரத்திப் பிடித்தனர். பின்னர், அவரை இந்திராநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, காவலர்கள் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஜெயஸ்ரீக்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் பெங்களூரு கிழக்கு துணை காவல் ஆணையர் விக்ரம் அமதே தெரிவித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட நபரின் பின்னணி குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 ரூபாய் ஃபிவிக்விக்கை பயன்படுத்தி தங்க சங்கிலையை திருட முயன்ற இந்த சம்பவம் ஒரு பக்கம் அச்சத்தை ஏற்படுத்தினாலும் இன்னொரு பக்கம் கிண்டலாகவும் பேசப்பட்டு வருகிறது.