பெங்களூருவில் உள்ள ஏரியில் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி பணம் பெற்ற ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர் கைது செய்யப்பட்டார்.
எந்த வித சூழ்நிலையிலேயும் இரவு பகல் பாராமல் பணி செய்யும் காவலர்களில் ஒருசிலர் செய்யும் தவறுகள், ஒட்டுமொத்த காவல்துறையினருக்கே கலங்கத்தை ஏற்படுத்தும். சில சமயம் காவலர்களின் உடையணிந்து மோசடி செய்யும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறும். பொதுவாகவே காவல்துறையினர் பொதுமக்களுக்கும் தங்களுக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தவே விரும்புகின்றனர். ஆனால் இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று கூடுதல் இடைவெளியையே ஏற்படுத்துகிறது. அப்படியான ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
அர்ஷா லத்தீஃப் என்ற பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ஜனவரி 29 ஆம் தேதி குண்டலஹள்ளி ஏரியை பார்வையிட தனது ஆண் நண்பருடன் சென்றேன். அங்குள்ள பூங்காவில் இருவரும் அமர்ந்திருந்த போது, அப்போது மஞ்சுநாத் ரெட்டி என்ற ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர் அங்கு வந்து தனிமையில் இருந்த தங்களை விசாரித்ததார்” எனவும் கூறியுள்ளார். மேலும், அங்கு உட்கார அனுமதி இல்லை எனக் கூறி, இருவரையும் படம் பிடித்து துன்புறுத்தத் தொடங்கியதாகவும் அர்ஷா லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
ஆனால் அங்கு பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தது. மஞ்சுநாத் ரெட்டி, எங்கள் இருவரின் வேலைகள், சொந்த ஊர், வருகையின் நோக்கம் குறித்து விசாரிக்கத் தொடங்கினார், மேலும் நாங்கள் அவருடன் காவல் நிலையத்திற்கு வந்து அனுமதியின்றி பூங்காவில் 'உட்கார்ந்த' காரணத்திற்காக அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்து ரூ.1000 பணத்தை பெற்றார் எனவும் அர்ஷா லத்தீஃப் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று நாங்கள் கேட்டபோது சரியாக பதிலளிக்கவில்லை. இத்தகைய நடத்தையால் முற்றிலும் திகைக்கிறேன். உண்மையில் எந்தத் தவறும் செய்யாததற்காக நாம் ஏன் இந்த காவல்துறையின் இந்த நடவடிக்கையை சகித்துக்கொள்ள வேண்டும்? என கேள்வியெழுப்பியிருந்தார். இது இணையதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஊர்காவல் படையைச் சேர்ந்த காவலர் மஞ்சுநாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மஞ்சுநாத் காவல்துறையைச் சேர்ந்தவர் என தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அதில் உண்மையில்லை. அவர் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே எனப்படும் ஊர்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.