பெங்களூருவில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திடீர் மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பெங்களூருவின் பல பகுதிகளும் மிதக்கின்றன.


இந்நிலையில், மாண்டியா மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து நகருக்கு குடிதண்ணீர் கொண்டு வரும் நீரேற்று நிலையம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் பெங்களூருவில் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு குடி தண்ணீர் வராது என்று பெங்களூரு தண்ணீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் பெங்களூருவில் 50 பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், பெங்களூருவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள டிகே ஹல்லி நீர் விநியோக நிலையத்தினை நாளை முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிடவுள்ளார். மாண்டியா நிலையத்திலிருந்து தேங்கிய நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பெங்களூரு மக்களுக்கு காவிரி நீர் தான் குடிநீர் ஆதாரம் என்பதால் அந்த நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள், பொறியாளர்கள் குழு உழைத்து வருகிறது.






பெங்களூரு நகரில் உள்ள பெரிய ஏரிகள் பல நிரம்பி வழிகின்றன. இதனால் மழை நீர் தாழ்வான பகுதிகளை சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


ரெயின்போ ட்ரைவ் லேஅவுட், சன்னி ப்ரூக்ஸ் லேஅவுட், சர்ஜாபூர் சாலை ஆகிய பகுதிகளில் படகு சவாரி தொடங்கும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதேபோல் அவுட்டர் ரிங் ரோடு பகுதியும் மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குதான் நிறைய ஐடி கம்பெனிகளும் உள்ளன. 


மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் இரண்டு பல்வேறு பகுதிகளிலும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையால் 30க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. பெங்களூருவில் ஒரே இரவில் 125 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளதே காரணம் ஆகும். பெங்களூருவின் கிழக்கு மாரத்தஹள்ளி பகுதியில் அதிகாலை 1.15 மணி நேரப்படி 125 மிமீ, மகாதேவபுரா தொட்னேக்கண்டி பகுதியில் 125 மிமீ, வடக்குபண்டிகொடகேஹள்ளி 125.5 மிமீ அளவு மழை பெய்துள்ளது. கிழக்கு எச்.ஏ.எல் விமான நிலையம் பகுதியில்126 மிமீ பதிவாகியுள்ளது. மிக மிக அதிகபட்சமாக தெற்கு சோழநாயக்கனஹள்ளி பகுதியில் 135 மிமீ மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.