கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வியாழக்கிழமை நள்ளிரவு காவல்துறை அதிகாரி ஒருவர் தம்பதியை தொந்தரவு செய்து அவர்களிடம் கட்டாயப்படுத்தி அபராதத்தை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இரவு 11 மணிக்கு மேல் வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்று சட்டத்தை மீறியதாக கூறி, PayTm செயலி மூலம் 1,000 ரூபாயை கட்டாயப்படுத்தி வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.
பிறந்தநாள் நிகழ்வில் இருந்து தம்பதியினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், சம்பிகேஹள்ளி காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஒரு காவலர் மற்றும் தலைமை காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தனக்கு நேர்ந்த சம்பவத்தை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்ட அந்த நபர், பெங்களூரு நகர காவல்துறை ஆணையரிடமிருந்து உதவி கோரியுள்ளார். "முந்தைய நாள் இரவு நானும் என் மனைவியும் சந்தித்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நள்ளிரவு 12.30 மணி இருக்கும்.
நானும் என் மனைவியும் ஒரு நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம் (நாங்கள் மன்யாதா டெக் பூங்காவிற்குப் பின்னால் உள்ள ஒரு பிளாட்டில் வசிக்கிறோம்).
நுழைவு வாயிலில் இருந்து சில மீட்டர் தொலைவில் ரோந்து வேன் ஒன்று எங்களுக்கு அருகில் வந்து நின்றது. போலீஸ் சீருடையில் இருந்த இருவர் எங்களின் அடையாள அட்டையைக் காட்டுமாறு கோரினார்கள். நாங்கள் திகைத்துப் போனோம்.
எங்களுடைய ஆதார் அட்டைகளை போலீஸாரிடம் காட்டினேன். அதன் பிறகு அவர்கள் எங்கள் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்து தனிப்பட்ட விவரங்களைக் கேட்டனர்.
சற்று அதிர்ந்தாலும் அவர்களின் கேள்விகளுக்கு பணிவாக பதிலளித்தோம். இந்த நிலையில், அவர்களில் ஒருவர் சலான் புத்தகம் போல் இருந்ததை எடுத்து எங்களின் பெயர்களையும் ஆதார் எண்களையும் பதிவு செய்ய ஆரம்பித்தார். சிக்கலை உணர்ந்து, எங்களுக்கு ஏன் சலான் வழங்கப்படுகிறது என்று கேட்டோம்.
இரவு 11 மணிக்குப் பிறகு சாலையில் சுற்றித் திரிவதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். அப்படியொரு விதி இருப்பதாக நம்பமுடியவில்லை என்றாலும், இரவு நேரமாகிவிட்டதாலும், எங்களது தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாலும், நிலைமையை அதிகரிக்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்" என பதிவிட்டுள்ளார்.
சாதாரண நாளில் தெருவில் நடந்து சென்ற வயது வந்த தம்பதிகளை ஏன் அடையாள அட்டையைக் காட்டச் சொல்ல வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சுரக்ஷா செயலி மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 112 மூலம் புகார் அளித்துள்ளேன். தன்னுடைய பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.