இந்துத்துவ அமைப்பு விடுத்த மர்ம மிரட்டலால் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் முனவர் ஃபருக்கியின் நிகழ்வை ரத்து செய்யச் சொல்லி பெங்களுரு காவல்துறை நிகழ்வு நடத்த இருந்த அரங்க நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. 28 நவம்பர் அன்று நடக்க இருந்த இந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்வுக்கு மொத்தம் 700 டிக்கெட்கள் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முனாவர் ஃபருக்கி கடந்த 2020ம் ஆண்டு அவரது காமெடி நிகழ்வு தேச வெறுப்பை ஏற்படுத்துவதாக இருப்பதாக உள்ளூர் எம்.எல்.ஏ. மகன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 27 அன்று நிகழ்வு நடக்க இருந்த குட் ஷெப்பர்ட் அரங்க நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதிய பெங்களூரு போலீஸ் முனாவர் ஃபரூக்கி சர்ச்சைக்குரிய நபர் என்பதாலும் இதனால் பெங்களூரைச் சேர்ந்த ஜெய் ஸ்ரீராம் சேனா சங்கதன் போன்ற இந்துத்துவ அமைப்புகள் ஆன்லைனில் மிரட்டல் விடுத்து வருவதாலும் பெங்களூருவின் அமைதியைக் காப்பாற்றும் வகையில் நிகழ்ச்சியை ரத்து செய்யும்படி கூறியதாக அரங்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் அச்சுறுத்தலுக்கு பயந்து நிர்வாகமும் நிகழ்வை ரத்து செய்துள்ளது.
நிகழ்வு ரத்து செய்யப்பட்டதால் மனமுடைந்து போன முனவர் ஃபரூக்கி ‘வன்முறை வென்றது, கலைஞன் தோற்றுப்போய்விட்டான்’ எனத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.