Volvo Crash: சாலை விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கார் விபத்தில் குடும்பமே பலி:



சனிக்கிழமையன்று நடந்த வோல்வோ எஸ்யூவி கார் விபத்தில், பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். நெல்மங்களா-தும்குரு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கண்டெய்னர் லாரி ஒன்று, கார் பாதுகாப்பிற்கான பிரீமியம் வாகனங்களில் ஒன்றாக கருதப்படும் வால்வோ XC90-ன் மீது கவிழ்ந்தது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. இதில் ஐஏஎஸ்டி சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 48 வயதான தலைமை நிர்வாக அதிகாரி சந்திரம் யெகாபகோல் மற்றும் அவரது மனைவி கவுராபாய், மகன் கியான், மகள் தீக்ஷா, மைத்துனர் விஜயலட்சுமி மற்றும் விஜயலட்சுமியின் மகள் ஆர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 



விபத்து நடந்தது எப்படி?


இரண்டு மாதங்களுக்கு முன்பாக வாங்கிய தனது காரில், சந்திரம் குடும்பத்தினருடன் சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, பெங்களூரு அருகே நெல்மங்களா-தும்குரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த நீல நிற கார் ஒன்று திடீரென பிரேக் அடிக்க, அதனை தொடர்ந்து வந்த கண்டெய்னர் டிரக்கின் ஓட்டுனரும் விபத்தை தடுக்கும் நோக்கில் பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், டிரக் கட்டுப்பாடின்றி செல்ல, உடனே வலது பக்கத்தை திருப்பியுள்ளார். அப்போது டிவைடரில் மோதிய டிரக், சாலையின் மறுபக்கம் சென்று கொண்டிருந்த பால் லாரி மீது இடித்துவிட்டு அருகே சந்திரம் குடும்பத்துடன் பயணித்த வால்வோ காரின் மீது கவிழ்ந்துள்ளது.






வழக்குப்பதிவு


விபத்து தொடர்பாக பாரதீய நியாய சன்ஹிதாவின் கீழ், அலட்சியத்தால் மனித உயிருக்கும் மரணத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில், அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் அலட்சியமாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் நெல்மங்களா போக்குவரத்து காவல்துறையால் ஆரிஃப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், சாலையில் திடீரென பிரேக் அடித்த அந்த நீல நிற காரின் ஓட்டுனரையும் போலீசார் தேடி வருகின்றனர்.






குவியும் கண்டனங்கள்:


விபத்து தொடர்பான தகவல் வெளியான தொடங்கியதில் இருந்து, சாலைகள் பாதுகாப்பானதாக மாற்றப்படாவிட்டால், பாதுகாப்பான கார்கள் மட்டும் இருந்து என்ன பலன்? எப்படி விபத்துகளைத் தடுக்க முடியும்? என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளது. ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “சாலையில் பாதுகாப்பாக இருப்பது பாதுகாப்பான காரால் மட்டும் அடைய முடியாது என்பதை இந்த படம் நினைவூட்டுகிறது. பாதுகாப்பான சாலைகள் + பாதுகாப்பான ஓட்டுநர் + பாதுகாப்பான கார்: இவை மூன்றுமே பாதுகாப்பிற்கு அவசியம்” என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனரோ, ”போக்குவரத்து விதிகள், மோசமான குடிமை உணர்வு மற்றும் செலுத்தும் வரிக்கு ஏற்ற தரமான சாலை போன்ற உள்கட்டமைப்பு வசதி ஆகியவை இந்தியாவில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என சாடியுள்ளார்.