உணவு வேண்டுமா ஸ்விக்கி செய், வெளியே போகணுமா ஓலா கூப்பிடு என எல்லாவற்றிற்கும் மொபைல் செயலியை நம்பும் காலமாகிவிட்டது இது. இந்த காலகட்டத்தில் இவை தவிர்க்க முடியாதவையும் ஆகிவிட்டன. இந்நிலையில் சில ஆன்லைன் சேவை நிறுவனங்கள் மக்களை சுரண்டுவதும் நடக்கிறது. 


இப்படித்தான் அண்மையில் ஓலா, உபெர், ரேப்பிடோ நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை சுரண்டுவதாக பொதுமக்களே மனு கொடுக்க அவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் பெங்களூரு கேப் ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஒரு புதிய யுத்தியைக் கண்டுபிடித்துள்ளனர். 


ஆம் டெலிகிராம் செயலி மூலம் அவர்கள் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் கேப் சேவையை வாழங்குகின்றனர்.
இதன்மூலம் தங்களை பயன்படுத்தும் கேப் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வாடகையில் அதிக கமிஷனைக் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு செல்லும் சூழல் தவிர்க்கப்படும் என்று கூறுகின்றனர்.
இது குறித்து ஒரு ஓட்டுநர், நாங்கள் அதிகக் கட்டணம் வாங்குவதாக புகார்கள் வருகின்றன. ஆனால் நாங்கள் வசூலிக்கும் தொகையில் 30 சதவீதம் வரை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு கமிஷனாக சென்றுவிடும். அப்படியிருக்கையில் நாங்கள் எப்படி எங்கள் வாகனத்துக்கான் இஎம்ஐ கட்டி, குடும்பத்தையும் பார்க்க முடியும். அதனாலேயே நாங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும்படி ஆகிறது. மேலும் பெட்ரோல் விலையும் அதிகமாக உள்ளது. பெங்களூரு போக்குவரத்து நெருக்கடியை ஊரே உலகமே அறியும். பல நிமிடங்கள் போக்குவரத்தில் காத்திருக்கும்போதும் பெட்ரோல் வீணாகிறது. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றார்.


10 டெலிகிராம் குரூப்கள் பயன்பாட்டில்:
தற்போது பெங்களூருவில் 10 குரூப்புகள் டெலிகிராமில் ஆக்டிவாக இருக்கின்றன. அதன் மூலம் பிக் அப், ட்ராப், ரேட் என அனைத்தும் பேசி முடிவு செய்யப்படுகிறது. இது குறித்து பெங்களூரு ஓலா, உபெர் ஓட்டுநர்கள் கூட்டமைப்பின் தலைவர் தன்வீர் பாஷா, வாடிக்கையாளர்கள் தடைபடாமல் வாகனங்கள் கிடைப்பதில் மகிழ்ச்சியாக உள்ளனர். ஓட்டுநர்களும், வாடிக்கையாளர்களும் பரஸ்பரம் பேசி முடிவு செய்கின்றனர். அதனால் முன்புபோல் இடைத்தரகர் இல்லாததால் கட்டணத்தில் குழப்பம் வருவதில்லை என்றார்.


இந்த டெலிகிராம் செயலியில் ஃப்ரண்ட்ஸ் கேப் சர்வீஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் 25000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதேபோல்  ‘A1 cab’ என்ற குழுமம் ஒன்று உள்ளது. இதில் 18,000 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்டோ சங்கங்கள் விரைவில் சொந்த ஆப்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. அதன்படி நம்ம யாத்திரி, ரூக் போன்ற ஆப்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.


பெங்களூருவில் குட்டு வாங்கிய ஓலா, உபெர்
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் ஓலா, உபெர், ரேபிடோ உள்ளிட்ட ஆன்லைன் புக்கிங் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கர்நாடகா போக்குவரத்துத்துறை விளக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடகா போக்குவரத்து ஆணையர் டிஎச்எம் குமார் கூறுகையில், கடந்த இரண்டு மூன்று நாள்களாகவே இந்த நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் அதிக அளவில் புகார் அளித்துள்ளனர். டாக்ஸி சேவை அளிக்கும் நிறுவனங்கள் கண்மூடித்தனமாக அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றன. எனவே, சேவைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் தரவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார். பொதுவாக குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 வரையில் வசூலிக்கப்படும் நிலையில், பெங்களூருவில் ஒன்று, இரண்டு கிமீ தூரத்திற்கு எல்லாம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள வாடிக்கையாளர்கள் புகார்களை தந்துள்ளதாக கூறப்படுகிறது.