பெங்களூருவில் பைக் டாக்ஸி ஓட்டிய இளைஞர் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் திட்டி போனை உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் டாக்ஸி சேவைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களை தவிர்த்து பைக், கார், ஆட்டோ போன்ற வாகனங்களின் டாக்ஸி சேவைகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
பைக் டாக்ஸி சேவையில் படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் தங்களது அன்றாட செலவுகளை கவனிக்க ஏதுவாக இதில் பணியாற்றி வருகிறனர். ஓலா, உபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பைக் டாக்ஸி சேவையில் பயண சலுகை, ஓட்டுநர்களுக்கான சலுகைகளை அறிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு, ஆட்டோ, கார் போன்றவற்றின் சேவைகள் குறைவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆங்காங்கே எழுந்துள்ளது.
இதனிடையே பெங்களூருவில் பைக் டாக்ஸி ஓட்டிய இளைஞர் அங்குள்ள ஆட்டோ ஓட்டுநரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவில் அந்த இளைஞரின் செல்போனை பறித்து கீழே போட்டு உடைக்கிறார்.
மேலும் பைக் டாக்ஸி சேவைகள் பெருமளவில் சட்டவிரோதமானவை என்று குற்றம் சாட்டுகிறார். வேறு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பைக் டாக்ஸிகளை மகிழ்ச்சியுடன் இயக்குகின்றனர். ஆனால் இங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அந்த வீடியோவில் ஆட்டோ ஓட்டுநர் அந்த இளைஞரை வேறு நாட்டவர் என சொல்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் ஆட்டோ ஓட்டுநர் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெங்களூரு மாநகர காவல்துறை இந்திரா நகர் போலீசில் இந்த வீடியோ குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.