கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது சட்டையை கழற்ற சொன்னதாக பெண் இசைக்கலைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். அது தனக்கு மிகவும் அவமானகரமானதாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை தனது ட்விட்டர் கணக்கில் அவர் பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த ட்விட்டர் கணக்கு தற்போது செயலிழக்கப்பட்டுவிட்டது. பெண் இசைக்கலைஞரின் சட்டையை கழற்ற சொன்னது குறித்து இயக்க மற்றும் பாதுகாப்பு குழுவிடம் தெரியப்படுத்தப்பட்டிருப்பதாக பெங்களூரு விமான நிலைய குழு விளக்கம் அளித்துள்ளது.
பொதுவாக, விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை கவனித்து வருகிறது.
அந்த இசைக்கலைஞர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது எனது சட்டையை கழற்றச் சொன்னார்கள். பாதுகாப்பு சோதனைச் சாவடியில் வெறும் உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்ததும் உண்மையில் அவமானகரமானது.
ஒரு பெண்ணாக இம்மாதிரியான அனுபவத்தை பெறக் கூடாது. ஒரு பெண்ணிடம் ஆடையை கழற்ற சொல்வதன் அவசியம் எங்கிருந்து வந்தது? " என அவர் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, அந்த பதிவு இன்று காலை நீக்கப்பட்டுள்ளதது. உடனடியாக, அவரது கணக்கும் செயலிழக்கப்பட்டது.
நீக்கப்பட்ட அந்த பதிவுக்கு பதில் அளித்த பெங்களூரு விமான நிலையம், "இப்படி நடந்திருக்கக் கூடாது. உங்களை தொடர்பு கொள்ள வேண்டும். எனவே, தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த சம்பவம் குறித்து நாங்கள் எங்கள் செயல்பாட்டுக் குழுவிற்கு தெரியப்படுத்தியுள்ளோம். மேலும், மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் தெரிவித்துள்ளோம்" என குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த விமான நிலையம், "பெங்களூரு விமான நிலையத்தின் கட்டுப்பாடு எங்களிடம் இல்லை. சிஐஎஸ்எஃப் தான் நிர்வகித்திருக்க வேண்டும். நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம். நாங்களும் ஓரளவுக்கு மட்டுமே ஆதரவு தர முடியும். CISF குறைந்த பணியாளர்கள் மற்றும் மத்திய அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது"
சமீப காலமாகவே, பாதுகாப்பு சோதனையின்போது ஏற்படும் பிரச்னைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப பெறப்பட்டது.
இதையடுத்து, விடுமுறைக்கு புறப்படும் சுற்றுலாப் பயணிகளால் விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
கடந்த மாதம், டெல்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு குழப்பம் நிலவியது. கவுன்டர்கள் மற்றும் பாதுகாப்பு பரிசோதனை மேற்கொள்ளப்படும் பகுதிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.