மோசமான புயலுக்குப் பின்னும் கூட அழகான சம்பவங்கள் நடைபெறலாம் என்பதை உறுதிப்படுத்தவே வானவில் இருக்கின்றது என பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியில் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி, தமிழில் விஜய்யின் குஷி படத்திலும் நடித்துள்ளார். குஷி படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு நடனமாடினார் ஷில்பா ஷெட்டி. இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.


கடந்த 2019-ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 19-ஆம் தேதி தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார். ஆபாச படம் தயாரித்து வெளியிட்ட ராஜ் குந்த்ரா, அதற்கான ஆடிஷனில் பங்கேற்ற சில நடிகைகளை ஆடையின்றி நிர்வாணமாக நடிக்க கூறியதாக புகார் எழுந்தது. மொத்தம் 9 நடிகைகள் ராஜ் குந்த்ரா மீது இதுபோன்ற புகார்களை அளித்தனர்.




இதனை தொடர்ந்து ராஜ் குந்த்ரா தனது பார்ட்னர்களுடன் ஆபாச படம் தொடர்பாக பேசிய வாட்ஸ்-அப் உரையாடல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது அலுவலகத்திலும் போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பல ஆபாச பட சிடிக்கள் கைப்பற்றப்பட்டன. அதோடு ராஜ் குந்த்ராவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற போலீசார் வீட்டிலேயும் விசாரணை நடத்தினர். 


ராஜ்குந்த்ராவின் ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சொந்த ஜாமீனாக ரூ.50000 செலுத்தி ஜாமீன் பெற்றார். அவரது கூட்டாளியான ரயான் தோர்பேவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. 


இந்நிலையில் கணவர் ஜாமீனில் வெளிவந்தவுடன், அவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் கவனம் பெற்றுள்ளது. தனது கணவர் சிறைக்குச் சென்றதை வாழ்க்கையில் வீசிய மோசமான புயல் என்றும், தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளதை புயலுக்குப் பிந்தைய அழகான நிகழ்வு என்றும் அவர் உருவகப்படுத்தி இந்த போஸ்ட்டைப் பதிவிட்டுள்ளார்.




ராஜ்குந்த்ரா கைதான ஒருசில நாட்களுக்குப் பின்னர், “தவறுகள் செய்யாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன்'' என்று அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவும் இதேபோல் கவனம் பெற்றது. ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டதை அவர் இவ்வாறு கூறினார் என்றெல்லாம் இணையவாசிகள் அர்த்தம் கற்பித்தனர்.


இப்போது, மோசமான புயலுக்குப் பின்னும் கூட அழகான சம்பவங்கள் நடைபெறலாம் எனப் பதிவிட்டு கணவர் மீது அதிருப்தியே தவிர வெறுப்பேதும் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்.


ஷில்பா ஷெட்டி தற்போது, சூப்பர் டான்ஸ் சேப்டர் 4 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிரார். கீதா கபூர், அனுராக் பாசுவுடன் இவரும் இந்த ரியாலிட்டி ஷோவின் நடுவராக இருக்கிறார். ஹங்காமா 2 என்ற படத்தின் மூலம் திரைக்கும் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். பாரேஷ் ராவலுடன் ஜோடியாக அவர் நடித்த இந்தத் திரைப்படம் டிஸ்னி பிளச் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.