கேரளாவை சேர்ந்த இளைஞர் அம்மாநில உயர்நிதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது மனைவி மற்றும் 11 மாத குழந்தை சட்டவிரோதமாக அவரது பெற்றோரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் அலெக்சாண்டர் தாமஸ் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரனைக்கு வந்தது. அப்போது, ஜும் செயலி மூலமாக ஜிஹாப் அணிந்தவாறு, மனுதாரரின் மனைவி ஆஜரானார்.


மலாலாவை போன்று தைரியமாக இருங்கள்:


விசாரணை தொடங்கியபோது, குழந்தையுடன் சென்று தனது கணவருடன் வசிக்கவே தான் விரும்புவதாக உறுதியாக தெரிவித்துள்ளார். திருமணத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு பெற்றோர் ஆதரவாக இல்லாவிட்டாலும்,  தனக்கு பிடித்த நபருடன் வாழவே தான் விரும்புவதாக கூறினார். தொடர்ந்து, நோபல் பரிசு வென்ற இளம்பெண் யார் என்று தெரியுமா என நீதிபதி அலெக்சாண்டர் கேள்வி எழுப்பினார். மேலும், மலாலாவைப் போல தைரியமாக இருங்கள். தைரியமாக பிடித்த வாழ்க்கையை தொடங்குங்கள். எப்போதும் உங்கள் பெற்றோரின் விருப்பப்படி செய்யத் தேவையில்லை  என கூறினார்.






படிக்க அறிவுறுத்திய நீதிபதிகள்:


மனுதாரர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தாங்கள் ஒன்றாக வசிக்க விரும்புவதாகச் உறுதிபட தெரிவித்ததை தொடர்ந்து, அவர்களது ஆலோசனை அமர்வு அறிக்கைகள் மற்றும் பதிவில் உள்ள மற்ற நடைமுறைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், குறிப்பிட்ட ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தனர்.


முன்னதாக, அந்த இளம் பெண் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும் மேற்படிப்பைத் தொடராததால், படிப்பைத் தொடருமாறு நீதிபதி அலெக்சாண்டர் தாமஸ் அறிவுறுத்தினார். நீங்கள் ஏன் இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு ஏதேனும் தொலைதூரக் கல்வி முறையிலோ சேரக்கூடாது? " என்றும் வினவினார். அதற்கு பதிலளித்த அந்த பெண், தனக்கு படிக்க ஆசை. மருத்துவ பட்டம் படிக்க வேண்டும். ஜார்ஜியாவில் படிக்கப் போகிறேன். என் சேர்க்கை மற்றும் எல்லாம் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று பதிலளித்தார்.


மலாலா:


பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடைக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக, பாகிஸ்தானை சேர்ந்த மலாலா துப்பாக்கியால் சுடப்பட்டார். அதில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்த அவர் தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்ததன் காரணமாக, 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.