பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, நடைபெற்ற சோதனையில் வருமான வரித்துறை அதிகாரி ஒருவருக்கும், பிபிசி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஏன் கேட் திறக்கவில்லை:
அந்த வீடியோவில், அதிகாரி ஒருவர் 10 நிமிடங்கள் ஏன் கேட்டை திறக்கவில்லை என காட்டமாக தெரிவித்துள்ளார். அதற்கு ஊழியர் ஏன் திறக்கவில்லை என கேட்க, அதற்கு என்னிடம் அடையாள அட்டை கேட்கப்பட்டது என தெரிவித்தார்.
அப்போது, அருகில் இருந்த பெண், சரியாகத்தான் கேட்டிருக்கிறார்கள், ஆம் சோதனை நடத்துவதற்கான ஒரு வாரண்ட்டை காட்டுங்கள் என பெண் கேட்டுள்ளார். இது, அங்கிருந்தவர்களிடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வருமான வரித்துறை சோதனை:
இன்று காலை பிபிசி-ன் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இது தொடர்பாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆளும் அரசாங்கத்தை விமர்சிக்கும் செய்தி நிறுவனங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசாங்கத்தின் முகமைகள் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் தொடர்ச்சியான போக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது.
சமீபத்தில், குஜராத் கலவரம் குறித்து, பிபிசி 2 ஆவணப்படங்களை வெளியிட்டிருந்தது. அதில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்தும், தற்போதைய சிறுபான்மையினரின் நிலைமை குறித்தும் ஆவணப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பிபிசி-க்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
மக்களாட்சிக்கு எதிரான போக்கு:
இதற்கு முன்பு நியூஸ்கிளிக் மற்றும் நியூஸ்லாண்டரி செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். எப்பொழுது எல்லாம் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைக்கப்படுகிறதோ, அப்பொழுது எல்லா அரசாங்கத்தின் முகமைகள் செய்தி நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன என இஜிஐ தெரிவித்துள்ளது.
இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் செயல் . இது மக்களாட்சிக்கு எதிரான போக்கு.சோதனைகளானது வரையறுக்கப்பட்ட விதிகளுக்குள் இருக்க வேண்டும். மேலும் ஊடகங்களின் சுதந்தரத்தை பாதிக்காத வகையில் அரசாங்கம் இருக்க வேண்டும் எனவும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.