கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கலவரத்திற்கும் அப்போதைய குஜராஜ் முதலமைச்சரான மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து அந்த ஆவணப்படம் பேசியிருந்தது.


இதையடுத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசி ஆவணப்படத்திற்கு அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்தது. யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் வெளியான பிபிசி ஆவணப்படத்திற்கான லிங் அதிரடியாக நீக்கப்பட்டது.


ஆனால், தடையை மீறி கேரளாவிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர். அதேபோல, தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்நிலையில், அவசர கால அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டு தடை வதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மற்றும் மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் ஆகியோர், இந்த விவகாரத்தில் தனித்தனியாக பொது நல வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தனர். மேலும், விரைவில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


இதையடுத்து, வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா ஜே.பி.பார்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வு, தடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தது.


மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம், ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆகியோரும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


வழக்கு குறித்து பேசிய சி.யு.சிங், "சமூக ஊடகங்களில் இருந்து ஆவணப்படம் பற்றிய இணைப்புகளை அகற்ற ஐடி விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களை மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது. மேலும்,ஆவணப்படம் தொடர்பான என். ராம் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோரின் ட்வீட்கள் நீக்கப்பட்டன.


ஆவணப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. ஆவணப்படத்தை திரையிட்டதற்காக அஜ்மீரில் உள்ள கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.


 






பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டதை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக அவர் சாடியுள்ளார்.