கோவை விளாங்குறிச்சி பகுதியில் ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் ‘பிராத்மிக் சிக்‌ஷா வர்க்’ என்ற பெயரில் சாகா பயிற்சியை நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாகா பயிற்சி மாணவர்களிடம் மதவெறியை தூண்டும் எனக்கூறி, இதற்கு தடை விதிக்க வலியுறுத்தி  தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர் கோவை மாநகர காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தனர். இந்த எதிர்ப்புகளையும் மீறி அப்பள்ளியில் திட்டமிட்டபடி சாகா பயிற்சி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் அப்பள்ளி முன்பாக தபெதிக, திவிக, விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.




இந்த நிலையில் நேற்று ஸ்ரீ தர்ம சாஸ்தா பள்ளியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட போலீசார் அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். முற்றுகை போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 19 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.




இதனிடையே போராட்டத்திற்கு முன்பாக பள்ளி முன்பாக நின்று கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினரை பள்ளிக்குள் செல்லுமாறு, துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார். இதையடுத்து பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற துணை ஆணையர் ஜெயச்சந்திரனை, இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் காவல் துறை அதிகாரிகளை பள்ளிக்குள் செல்ல விடாமலும், பணி செய்ய விடாமலும் தடுத்த இந்து அமைப்புகளை சேர்ந்த 5 பேர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உதவி ஆய்வாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் முருகன், பாஜகவை சேர்ந்த  காளிதாஸ், இந்து முன்னணியை சேர்ந்த கோவிந்தன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த அருண், கருப்புசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண