கடந்த 1996ஆம் ஆண்டு, ஒருங்கிணைந்த பிகார் மாநிலத்தின் முதலமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 950 கோடி ரூபாய் பணம், தவறான காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் இதற்கு வசதியாக கால்நடை பராமரிப்புத் துறையால் போலியான பில்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கால்நடை தீவன வழக்கு:
சாய்பாசா துணை ஆணையர் அமித் கரே, 1996 ஆம் ஆண்டு இந்த மோசடியைக் கண்டுபிடித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான 4 வழக்குகளில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலுவுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தை சிபிஐ நாடியுள்ளது. சிபிஐ மனு மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி எடுத்து கொள்ளப்பட உள்ளது.
இந்த வழக்குகளில் லாலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அவர் பல்வேறு நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த மாதம்தான், லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவர்களது மகனும், பிகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது, அரசு வேலைக்கு நிலம் பெற்ற வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை, ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தபோது, அவரின் குடும்பத்திற்கு நிலம் அன்பளிப்பாகவும் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டதற்கு ஈடாக, இந்திய ரயில்வேயில் சிலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக விசாரணை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
மணீஷ் சிசோடியா, செந்தில் பாலாஜி வரிசையில் லாலு பிரசாத்:
அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் லாலி பிரசாத். எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முதல் வெற்றியாக கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி, பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மெகா கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் முக்கிய பங்காற்றியவர்கள் லாலி பிரசாத்தும் அவரது மகன் தேஜஸ்வியும்தான். இப்படிப்பட்ட சூழலில், கால்நடை தீவனம் ஊழல் தொடர்பான வழக்குகளில் லாலுவுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பும் விதமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
முன்னதாக, தெலங்கானா முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவரின் மகள் கவிதா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உட்படுத்தியதை தொடர்ந்து,
சந்திரசேகர் ராவ், மத்திய பாஜக அரசை விமர்சிக்காமல் அமைதி காத்து வருகிறார்.
அதேபோல, டெல்லியில் மணீஷ் சிசோடியா, தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி ஆகியோரை மோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை சிறையில் அடைத்துள்ளது. தற்போது, இந்த வரிசையில் லாலுவுக்கு நெருக்கடி தரும் வகையில் சிபிஐ இந்த வழக்கை கோயில் எடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.