இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை நம்பகத்தன்மை அற்றது என, பிரபல முதலீட்டாளர் சேவை நிறுவனமான மூடிஸ் எச்சரித்துள்ளது.
மத்திய அரசு விளக்கம்:
மூடிஸ் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ஆதார் உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் அடையாள அட்டை. மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் கருத்துக்கள் ஆதாரமற்றவை. எந்த ஆதாரமும் அல்லது அடிப்படையும் இல்லாமல், ஆதாருக்கு எதிராக உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் அடையாள அட்டைக்கு எதிராக பெரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் ஆதார் அட்டையை 100 பில்லியனுக்கும் அதிகமான முறை தங்களை அங்கீகரிப்பதற்கான சேவைகளில் பயன்படுத்தி, அதன் மீதான தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒரு வெளிப்படையான குறிப்பு. MGNREGS தரவுத்தளத்தில் ஆதார் பதிவு செய்யப்பட்டது. தொழிலாளர்கள் தங்கள் பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி அங்கீகரிக்கத் தேவையில்லை. மூடிஸ் ஆய்வறிக்கையை நிராகரிப்படுகிறது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூடிஸ் சொன்னது என்ன?
மூட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஆதார் அமைப்பு அடிக்கடி சேவை மறுப்புகளை விளைவிப்பதாகவும், பயோமெட்ரிக் தொழில்நுட்பங்களின் நம்பகத்தன்மை குறிப்பாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபடும் உடல் உழைப்பாளர்களுக்கான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கைரேகை, கருவிழி ஸ்கேன் மூலம் சரிபார்ப்பு மற்றும் ஒரு முறை கடவுக்குறியீடுகள் (OTPகள்) போன்ற மாற்று வழிகள் மூலம் பொது மற்றும் தனியார் சேவைகளுக்கான அணுகலை ஆதார் அமைப்பு செயல்படுத்துகிறது. இருப்பினும், இது "அங்கீகாரத்தை வழங்குவதில் சிக்கல் மற்றும் பயோமெட்ரிக் நம்பகத்தன்மை பற்றிய கவலைகளை சந்திப்பதாகவும் தெரிவ்த்துள்ளது.
மத்திய அரசின் ஆதார் திட்டம்:
பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தரவுகளைப் பயன்படுத்தி 120 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களுக்கு, 12 இலக்க எண் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் பலனடைய, ஆதார் அட்டை அடிப்படையாக உள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், சர்வதேச அளவிலான தர ஆராய்ச்சி நிறுவனமான மூடிஸ், ஆதார் அட்டை நம்பகத்தன்மை அற்றது என எச்சரித்துள்ளது. அதேநேரம், ஆதார் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கசியவும் இல்லை, திருடப்படவும் இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.