Israel War: இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு  நடத்திய தாக்குதல் எதிரொலியாக ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழு நேற்றை தினம் யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஒரே நேரத்தில்  5,000 ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேலில் போர் பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. அங்கு காஸா எல்லை பிரச்சினை நீண்ட காலமாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனம் இடையே தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்திய அடுத்த சில மணி நேரத்தில் அந்நாட்டுக்குள் புகுந்தனர். 


இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1.100க்கும் மேற்பட்ட மக்கள், ராணுவத்தினர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள டெல் அலிவ் நகருக்கான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து வாரம்தோறும் இந்நகருக்கு 5 விமானங்கள் சென்று வருகிறது. ஏற்கனவே நேற்று டெல்லியில் இருந்து டெல் அலிவ் நகருக்கு இயக்கப்படவிருந்த AI139 ரக விமானமும், டெல் அலிவ் நகரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படவிருந்த AI140 விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் நலனை கருத்தில் கொண்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.