கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது தொடர்பான உடல் நலக்குறைவு காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் பாபாசாகேப் புரந்தரே அனுமதிக்கப்பட்டார். அவரது உடல், மருத்துவ சிகிச்சையை ஏற்றுக் கொள்ளாததை தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்தார். கடந்த ஒரு வாரமாக நிமோனியா நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாபாசாகேப் புரந்தரேவுக்கு உடல் நிலை நேற்று மேலும் மோசமானதை அடுத்து, இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் வைகுண்ட சுடுகாட்டில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான இவருக்கு வயது 99. பாபா சாகேப் புரந்தரேவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.



பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே என்ற இயற்பெயர் கொண்ட இவர் பல வரலாற்று புனைவுகளை இயற்றியுள்ளார். புரந்தரேயின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, திரைப்படத் துறையினர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள பதிவில், "நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைப்படுகிறேன். பாபாசாகேப் புரந்தரேவின் மறைவு வரலாற்று உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் தலைமுறையினர் சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் மேலும் இணைந்திருப்பதற்கு அவருக்கு நன்றி. அவரது மற்ற படைப்புகளும் நினைவுகூரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.






 


புரந்தரே எழுதிய சத்ரபதி சிவாஜியின் வரலாறு பற்றி ஆய்வுகள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலமே புரந்தரே புகழ் பெற்றவர். பாபாசாகேப் புரந்தரே எழுதிய வரலாற்று நாடகமான “ஜந்தா ராஜா” 200-க்கும் மேற்பட்ட கலைஞர்களால் நாடகமாக நடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இவருக்கு 2015-ம் ஆண்டு மகாராஷ்டிர பூஷன் விருது கிடைத்தது. வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான புரந்தரேவுக்கு 2019ல் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.