அயோத்தி ராமர் கோயில் நாளை திறக்கப்படும் நிலையில் அம்பானி, அதானி தொடங்கி நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. பல்வேறு நகரங்கள், பாலங்கள், கோயில்கள், சாலைகளில் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன. கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.


இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியிலும் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை ( ஜன.22ஆம் தேதி) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு தரப்புக்கும் அழைப்பு


அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ஒட்டுமொத்த அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் எனப் பல்வேறு தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர், பிரபல இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் ஜனவரி 22 அன்று நடைபெற உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு மாநில விருந்தினர்களாக அழைக்கப்பட்ட இந்தியத் தொழிலதிபர்களில் முதன்மையானவர்கள்.


அம்பானி, அதானி... டாடா குழுமத்தினர்


இந்த பட்டியலில் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி, அவரது தாய் கோகிலாபென், மனைவி நீதா அம்பானி, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த், மருமகள்கள் ஷ்லோகா மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் மற்றும் மனைவி லலிதா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் தொழிலதிபர் கவுதம் அதானியும், சுரங்க அதிபர் அனில் அகர்வாலும் இடம் பெற்றுள்ளனர்.


இந்துஜா குழுமத்தின் அசோக் இந்துஜா, விப்ரோவின் அசிம் பிரேம்ஜி, பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா, டோரண்ட் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சுதிர் மேத்தா, ஜிஎம்ஆர் குழுமத்தின் ஜிஎம்ஆர் ராவ் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் நிரஞ்சன் ஹிராநந்தனி ஆகியோருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


வேறு யாருக்கெல்லாம் அழைப்பு?


ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது மனைவி நிர்ஜா, பிரமல் குழுமத்தின் அஜய் பிரமல், மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் ஆனந்த் மஹிந்திரா, டிசிஎம் ஸ்ரீராம் நிறுவனத்தின் அஜய் ஸ்ரீராம் மற்றும் டிசிஎஸ் தலைமைச் செயல் அதிகாரி கீர்த்திவாசன் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.


இவைதவிர ஹெச்டிஎஃப்சியின் முன்னாள் தலைவர் தீபக் பரேக், டாக்டர் ரெட்டிஸ் பார்மாசூட்டிகல்ஸின் சதீஷ் ரெட்டி, Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் சிஇஓ புனித் கோயங்கா, எல்அண்ட்டி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.என்.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.