Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, இன்று அங்கு நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். 


அயோத்தி ராமர் கோயில் கொண்டாட்டம்:


உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள, ராமர் கோயிக் கருவறையில் சிலையை நிறுவும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதையடுத்து அந்த நகரில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்,  கோஷங்களை எழுப்பியும்,  நடனமாடியும், காவி நிற கொடிகளை அசைத்தும்,பாடல்களை பாடிக்கொண்டும், இசைக்கருவிகளை வாசித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால்  சாலைகள், ரயில் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன.  மதியம் 12.20 மணிக்கு தொடங்கும் சிலையை நிறுவும் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட சுமார் 7,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கலைநிகழ்ச்சிகள் அட்டவணை:


கோயில் குடமுழுக்கை ஒட்டி அங்கு பல்வேறு சிறப்பு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 


- காலை 10.30 முதல் மதியம் 2 மணி வரை தேவ்கினந்தன் தாக்கூர் வழங்கும் ஸ்ரீ ராம் கதா பாராயணம்0
- அயோத்தியின் 100 இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கலாசார ஊர்வலம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500 நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் பிராந்திய கலாசார மையங்களில் இருந்து 200 கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள்.
- ராம்கதா பூங்காவில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ராம்லீலா காட்சி.
-  மாலை 6.30 முதல் 7 மணி வரை சரயு ஆரத்தி
- இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை எல்.ஈ.டி விளக்குகளை கொண்ட நிகழ்ச்சி


- ராம்கதா பூங்காவில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை வாடேகர் சகோதரிகளின் கீர்த்தனைகள்
- இரவு 7 முதல் 8 மணி வரை துளசி உத்யானில் ஷர்மா பந்துவின் பஜன் சந்தியா 
- லேசர் விளக்குகள் நிகழ்ச்சி இரவு 7.30 முதல் 7.45 வரை
- சுற்றுச்சூழலுக்கு உகந்த வானவேடிக்கை இரவு 7.45 முதல் 7.55 வரை
- கலாச்சார மாலை 8 மணி முதல் 9 மணி வரை ராம் கதா பூங்காவில் கன்ஹையா மிட்டல் உரையாற்றுகிறார்
- இரவு 8 மணி முதல் 9 மணி வரை துளசி உத்யனில் ரகுவீர பத்மஸ்ரீ ஹேமமாலினி பரதநாட்டியம்


கோயில் அறக்கட்டளையின்படி, கோயில் கருவறையில் சிலையை நிறுவும் குடமுழுக்கு விழா,  ஜனவரி 16 ஆம் தேதி சரயு நதிக்கு அருகில் தொடங்கி திங்கட்கிழமை பிற்பகல் 'அபிஜீத் முஹூர்த்தத்தில்' முடிவடைகிறது. இதையொட்டி இன்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் இதைப் பின்பற்றி விடுமுறை அறிவித்துள்ளது.  லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வை தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களில் நேரடியாகக் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.