கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு ராமர் கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேபோல, வேறொரு இடத்தில் மசூதி கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.


இதற்காக, உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய ஐந்தே ஆண்டுகளில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், மசூதி இன்னும் கட்டப்படாமல் உள்ளது.


பிரம்மாண்டமாக கட்டப்படும் அயோத்தி மசூதி:


இச்சூழலில், அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் மெக்காவில் இருந்து புனித கல் கொண்டு வரப்பட உள்ளது. கருப்பு மண்ணாலான புனித கல்லில் திருக்குர்ஆனின் வாசகங்கள் தங்கத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. மசூதி கட்டுவதற்காக அயோத்தியின் தன்னிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மசூதிக்கு முஹம்மது பின் அப்துல்லா மசூதி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்த மசூதி கட்டும் பொறுப்பை இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளது உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம். அயோத்தி மசூதியின் அடிக்கல் நாட்டுவதற்காக மெக்காவில் இருந்து புனித கல் எடுக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய அறக்கட்டளை உறுப்பினர்கள், "கல் கொண்டு வரப்பட்டு வருகிறது.


மெக்காவிலிருந்து ஒரு சில அறக்கட்டளை பணியாளர்களால் கொண்டு வரப்படுகிறது. இது ஏப்ரல் மாதத்திற்குள் அயோத்திக்கு கொண்டு வரப்படும். அதன் பிறகு மசூதியின் கட்டுமானப் பணிகள் தொடங்கும்" என்றனர்.


புனித தலமான மெக்காவில் இருந்து வரும் ஸ்பெஷல் கல்:


இதுகுறித்து விரிவாக பேசிய மசூதி வளர்ச்சி குழு தலைவரும் இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை உறுப்பினருமான ஹாஜி அராபத் ஷேக், "இது அல்லாவின் செயல். இஸ்லாமியர்களின் புனித நகரத்தில் இருந்து அவருக்கான வேலையைத் தொடங்குவதை விட சிறந்தது எதுவுமில்லை. 


எனவே, மெக்காவிலிருந்தே எங்கள் பயணத்தைத் தொடங்க முடிவு செய்தோம். நான் மகாராஷ்டிராவிலிருந்து மெக்காவிற்கு புதிதாக  வெட்டப்பட்ட கல்லை எடுத்துச் சென்று, அதை புனித நீரால் கழுவினேன். பிறகு, மற்றொரு புனித தளமான மதீனாவுக்கு செங்கலை எடுத்துச் சென்று அங்குள்ள புனித நீரில் கழுவி தொழுகை நடத்தினோம்.


கடந்த 2ஆம் தேதி, புனித கல்லை மீண்டும் மகாராஷ்டிராவிற்கு கொண்டு வந்தோம். பின்னர், கல் அஜ்மீர் ஷெரீப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரார்த்தனைக்குப் பிறகு அது அயோத்திக்கு கொண்டு செல்லப்படும். அயோத்திக்கு கல்லை எப்படி எடுத்துச் செல்வது என்று இன்னும் திட்டமிட்டு வருகிறோம்.


 






சிலர் கால் நடையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார்கள். அதற்கு 30 நாட்கள் ஆகும். சிலர் அதை சாலை அல்லது ரயிலில் கொண்டு செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். ஏனெனில் ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பார்கள். அவர்கள் அயோத்தி பயணத்தில் எங்களுடன் வருவார்கள். ஏப்ரல் மாதத்திற்குள் கல்லை அயோத்தியை அடையும் வகையில் முழுப் பயணமும் திட்டமிடப்பட்டு மசூதியின் அடிக்கல் நாட்டப்படும்" என்றார்.