இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலைகாகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.  


இந்திய மாணவர் கொலை:


இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தாலும், சமீப காலமாக அங்கு இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் அனைவரின் பாதுகாப்பிற்கான கேள்வியை எழுப்பியுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஒரு மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


23 வயதான இந்திய மாணவரின் உடல் நேற்று மாலை 5 மணிக்கு க்ரோஸ் க்ரோவ் நேச்சர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இவர், சமீர் காமத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், இண்டியானாவில் பர்டூ பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வந்தார்.  இவர் கடந்த 2023ஆம் ஆண்டில் பர்டூ பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முதுகலை பட்டம் பெற்ற அவர், அதே துறையில் பிஎச்டி படித்து வந்தார். 


இந்த நிலையில், இந்திய மாணவர் சமீர் காமத்தின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் எப்படி இறந்தார்? யார் கொலை செய்தார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த ஆண்டில் மட்டும் 3 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது  மேலும் ஒருவர் உயிரிழந்தது அங்கு இருக்கும் இந்திய மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 


தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்:



  • பர்டூ பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா கடந்த ஜனவரி 29ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  கடந்த 28ஆம் தேதி முதல் ஆச்சார்யாவை காணவில்லை என கூறப்பட்ட நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அது ஆச்சார்யாவின் சடலம் என அடையாளம் காணப்பட்டது.

  • ஹரியானாவைச் சேர்ந்த  விவேக் சைனி ஜார்ஜியாவின் லித்தோனியாவில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தார். அதேநேரம், அங்குள்ள கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்  வீடற்ற  ஜூலியன் ஃபாக்னர் என்பவருக்கு அடைக்கலம் கொடுத்த உணவு வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 16ம் தேதியன்று 25 வயதான பால்க்னருக்கு இலவச உணவு வழங்க மறுத்ததாகவும், இதனால் அவர் விவேக் சைனியை அடித்து கொன்றதாகவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.


 



  • இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் (UIUC) பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 18 வயதான அகுல் தவான் ஜனவரி மாத தொடக்கத்தில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் ஹைபோதெர்மியாவால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகாரளித்த பிறகு பல்கலைக்கழகத்தின் காவல்துறை அலட்சியம் மற்றும் செயலற்ற தன்மையைக் குற்றம் சாட்டி தவானின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.