ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மார்ச் 8 முதல் மார்ச் 11 வரை நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார்.
ஆஸ்திரேலிய பிரதமர்:
இது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் டிசம்பரில் அமலுக்கு வந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்படி (MEA), ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆஸ்திரேலியாவின் வர்த்தக மற்றும் சுற்றுலா அமைச்சர் செனட்டர் டான் ஃபாரல் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா அமைச்சர் மேடலின் கிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும், உயர்மட்ட வணிகக் குழுவும் உடன் வருகை தருகின்றனர்.
அந்தோணி அல்பானீஸ் ட்விட்டரில் இந்திய பயணம் பற்றி பதிவிட்டுள்ளார், "இன்று நான் அமைச்சர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் குழுவை இந்தியாவிற்கு உடன் அழைத்து வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான அழைப்பின் பேரில், நாங்கள் வருகிறோம். அகமதாபாத், மும்பை மற்றும் புது தில்லிக்கு பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது இந்தியாவுடனான எங்கள் உறவை வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பு” என பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் தனது இந்திய பயணத்தின் போது, ஆஸ்திரேலியாவில் நிலக்கரி மற்றும் சுரங்கம் சார்பான துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. KABIL (Khanij Bidesh India Limited) ஆஸ்திரேலியாவில் நிலக்கரி மற்றும் சுரங்கம் சார்ந்த துறையில் குறிப்பிடத்தக்க முதலீடு செய்ய உள்ளது, இது ஆஸ்திரேலிய அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் குறிப்பாக வணிக சமூகத்தால் வரவேற்கப்பட்டது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பசுமை எரிசக்தி துறையில் ஒன்றாக இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரி 2022 இல், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.