Delhi ELection: டெல்லி முதலமைச்சர் அதிஷி மர்லேனா தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் வழங்கியுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் ராஜினாமா..!
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்ற நிலையில், ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தது. இதையடுத்து, அக்கட்சி சார்பில் முதலமைச்சராக இருந்த அதிஷி மர்லேனா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தையும் அவர் டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் சமர்ப்பித்தார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அர்விந்த் கெஜ்ரிவால் கைதானதை தொடர்ந்து, அவர் தனது முதலமைச்சர் பதவியை அதிஷிக்கு கடந்த நவம்பர் மாதம் விட்டுக்கொடுத்தார். இந்நிலையில், 4 மாத இடைவெளியில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியது. இதனால், டெல்லியின் இரண்டாவது பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அதிஷி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்ற, பாஜக புதிய ஆட்சியை அமைக்க வழிவகை செய்யும் நோக்கில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
போராடி வென்ற அதிஷி:
ஆம் ஆத்மி சார்பில் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி, பாஜகவின் ரமேஷ் விதுரி மற்றும் காங்கிரஸின் அல்கா லம்பா ஆகியோரை எதிர்கொண்டார். பாஜக வேட்பாளருடன் கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியில் சுமார் 900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது எம்.எல்.ஏ., பதவியை தக்கவைத்தார்.
”போராட்டத்திற்கான நேரம்” - அதிஷி
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, “ முதலில், டெல்லி மக்களுக்கும், வலுவாக நின்ற எங்கள் கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவின் சர்வாதிகாரம் மற்றும் குண்டர்களுக்கு எதிரான போர் தொடரும். இது ஒரு பின்னடைவுதான், ஆனால் டெல்லி மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் ஆம் ஆத்மி கட்சியின் போராட்டம் தொடரும். என்னை நம்பிய மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு எங்கள் செய்தியை பொதுமக்களிடம் எடுத்துச் சென்ற எனது அணிக்கும் நன்றி கூறுகிறேன். நான் எனது இடத்தை வென்றுள்ளேன், ஆனால் இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போர் தொடரும். ஆம், இது ஒரு படி பின்னடைவு தான், ஆனால் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து போராடும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக ஆட்சி:
27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பாஜக கட்சியின், எம்,எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் அடுத்த முதலமைச்சர் யார் என தேர்தெடுக்கப்பட்டு, விரைவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.