பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த நான்கு நாள் க்ரிஷி மேளா, ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது, வானிலை இடையூறுகள் இருந்தபோதிலும், கடைசி நாளில் 2.46 லட்சம் பேர் வந்திருந்தனர். இதன் மூலம் கடந்த நான்கு நாட்களாக மொத்தம் 8 லட்சம் பேர் மேளாவை பார்வையிட்டனர். அதில் அரிய வகை காளை ஒன்று தென்னிந்தியாவில் தாய் இனமாக அறியப்பட்டு தற்போது வெதுகுவாக அழிந்து வருகிறது. அந்த காளை அங்கு வந்திருந்தோர் இடையே பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. மாதம் 24 லட்சம் சம்பாதிக்கும் இந்த ஹல்லிகர் இன மாடு 1 கோடி ரூபாய் விலைக்கு விற்பனைக்கு வந்திருந்தது. 






 


அதன் உரிமையாளர் போரே கவுடா கூறுகையில், "கிருஷ்ணா என்று பெயர் கொண்ட இந்த காளை 3.5 வயதுடைய ஹல்லிகர் இன காளை. தற்போது ஹல்லிகர் இனம் வெகுவாக அழிந்து வருகிறது. இப்போதுள்ள எல்லா நாட்டு காளை இனங்களுக்கும் ஹல்லிகர் இனம் தான் தாய் இனம். ஹல்லிகர் இனத்தின் விந்து வங்கி ஒன்று அமைத்துள்ளோம். அங்கு ஒரு விந்து நீடில் ரூ.1,000க்கு விற்கிறோம். எனக்குத் தெரிந்தபடி, ஹல்லிகர் இனத்தின் விந்து வங்கியை யாரும் இதுவரை செய்யவில்லை. அதனால் மண்டியா மாவட்டத்தில் உள்ள மல்வள்ளியில் நாங்கள் தனிப்பட்ட முறையில் அதைச் செய்தோம்." என்று கூறினார்.



"மாதம் 8 முறை கிருஷ்ணாவிடம் இருந்து விந்து எடுக்கிறோம். அதன் மூலம் ஒரு முறை எடுக்கும் விந்தில் இருந்து 300 நீடில்கள் செய்கிறோம். மொத்தம் எட்டு முறை என்றால் மாதம் 2,400 நீடில்கள் வங்கிக்கு தருகிறோம். அதன் மூலம் மாதத்திற்கு 24 லட்சம் சம்பாதிக்கிறது கிருஷ்ணா. தாவணகெரே, ராமநகரா, சிக்மகளூர் போன்ற பிற மாவட்டங்களில் விந்து வங்கி உருவாக்கியுள்ளோம், தற்போது பெங்களூருவில் உள்ள தாசரஹள்ளியிலும் புதிதாக ஒன்று திறக்கிறோம். அதன்மூலம் ஹல்லிகர் இன விந்துவை வாங்க விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள இடங்களில் அதை வாங்கலாம். கிருஷ்ணாவின் எடை தற்போது ஒரு டன். இதன் விந்து தேவை அதிகமாக இருப்பதால் நல்ல முறையில் விந்து உற்பத்தி ஆவதற்கு ஏற்ப சத்தான உணவுகளை கொடுத்து வருகிறோம்" என்று போரே கவுடா மேலும் கூறினார்.