வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலந்திலும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.


நாகாலாந்தில் தேர்தல்:


மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்றங்களில் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இருமாநிலங்களுக்கும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியை சேர்ந்த நெய்பியு ரியோ ஒன்பதாவது முதலமைச்சராக உள்ளார். இன்று நடைபெற உள்ள வாக்குப்பதிவில் வாக்களிக்க 13 லட்சத்திற்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனர். 59 தொகுதிகளில் 183 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜுன்ஹிபோட்டோ மாவட்டத்தில் உள்ள அகுலுட்டோ தொகுதியில் பாஜகவை சேர்ந்த கஜிட்டோ கினிமா எனும் வேட்பாளர் போட்டியின்றி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடு எடுக்கப்பட்டுள்ளார். இதற்காக, 2,291 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவற்றில் 196 பெண் வாக்குச் சாவடி பணியாளர்களாலும், 10 மாற்றுத்திறனாளிகளாலும் நிர்வகிக்கப்படுகிறது.


மேகாலயாவில் தேர்தல்:


மற்றொரு வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 59 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் தேசிய மக்கள் கட்ச போராடி வரும் நிலையில், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் கட்டி வருகின்றன. இந்த தேர்தலில் வாக்களிக்க 21 லட்சத்திற்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 3,419 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 640 வாக்குச் சாவடிகள் பாதிக்கப்படக்கூடியவை என்றும், 323 முக்கியமானவை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேகாலயாவில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில், 36 தொகுதிகள் காசி, ஜெயின்டியா மலை பிராந்தியத்திலும், 24 காரோ மலை பிராந்தியத்திலும் அமைந்துள்ளன. இதனிடையே, சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.


பாதுகாப்பு ஏற்பாடுகள்:


19 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக மாநில போலீசாருடன் இணைந்து, 119 கம்பெனி மத்திய ஆயுதப்படையினரும் களத்தில் உள்ளனர். 


4  மாநிலங்களில் இடைதேர்தல்:


தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்குத் தொகுதியை போன்றே, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லும்லா, மேற்கு வங்கத்தில் சாகர்டிகி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் ஆகிய காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.


மகாராஷ்டிராவில் இடைதேர்தல்:


இதனிடையே, மகாராஷ்டிராவில் காலியாக உள்ள கஸ்பா மற்றும் சிஞ்வாட்டுக்கு ஆகிய தொகுதிகளுக்கான இடைதேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஆனால், இரண்டு தொகுதிகளிலும் மந்தமான வாக்குப்பதிவு அதாவது சராசரியாக 45 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளே பதிவாகின.


 


தேர்தல் முடிவுகள்:


மேகாலயா, நாகாலாந்து மற்றும் 4 மாநில இடைதேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் 2-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.