2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ட்ரைலர் என்று அழைக்கப்படும் ஐந்து மாநிலத் தேர்தல்களின் நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது பாஜக. அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெரும் வெற்றியைப் பதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனது ஆட்சியை அமைக்கும் விதமாக பெரு வெற்றியைப் பெற்றுள்ளது. 


உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.. அவற்றில் மிக முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம்..


1. 403 இடங்களைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்தில் பாஜக 250 இடங்களுக்கு அதிகமாக வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ள சமாஜ்வாதி கட்சி முதலிடத்தை விட சுமார் 100 தொகுதிகளை இழந்துள்ளது. 


2. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் சுமார் 90 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியமைக்கிறது. தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி வெறும் 13 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. 



3. 2017ஆம் ஆண்டு மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய கட்சி என அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது அதே மாநிலங்களில் பாஜகவுக்கு அடுத்த இடங்களைப் பிடித்து வருகிறது. 


4. 70 இடங்களைக் கொண்டுள்ள உத்தராகண்ட் சட்டமன்றத் தொகுதியில் பெரும்பான்மை இடங்களை விட அதிகமாக 45 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளது பாஜக. மறுபக்கம், காங்கிரஸ் கட்சி 20 இடங்களுக்கும் குறைவாக வெற்றி பெற்றுள்ளது. 


5. கோவா மாநிலத்தின் 40 இடங்களில் 19 இடங்களைப் பெற்றுள்ள பாஜக, 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்களிடம் இருப்பதாகவும், உடனடியாக ஆளுநரைச் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.


6. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான மகாராஷ்ட்ரா கோமந்தக் கட்சி தற்போது 4 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கோவாவில் தங்கள் இருப்பை நிரூபிக்கும் விதமாக இரண்டு இடங்களின் வெற்றி பெற்றுள்ளதோடு, மற்றொரு இடத்தின் முன்னணி வகித்து வருகிறது. 


7. பாஜக முன்னிலை வகித்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநில முதல்வர் கான்ரட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி மணிப்பூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவாகியிருப்பதோடு, காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 



8. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களான நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தனியாகக் கட்சி தொடங்கிய முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், பாட்டியாலா நகர்ப்புறத் தொகுதியில் அகலி தளம் கட்சியின் எம்.எல்.ஏ சுக்பிர் பாதலிடம் தோல்வி அடைந்துள்ளார். 


9. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் சிங் மண்ணைக் கொண்டாடும் பணிகள் பஞ்சாபில் தொடங்கியுள்ளன. அவரது வீட்டில் இனிப்புகள் செய்யப்பட்டிருப்பதோடு, தனடு சொந்த ஊரான சங்க்ருரில் அவரைப் பாராட்டும் விதமாக பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. 


10. சுமார் 100 இடங்களில் சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் இருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியமைத்த முதல் கட்சியாக மாறியுள்ளது பாஜக. சுமார் 80 நாடாளுமன்றத் தொகுதிகளுடன் மத்தியில் ஆட்சியமைக்க உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெறுவது முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.