காமெடி நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி, பஞ்சாப் முதலமைச்சராகப் போகும் பகவந்த் மானின் பின்னணி குறித்துப் பார்க்கலாம். இந்தியாவில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (மார்ச் 10) நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் தவிர்த்து 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கப்போகிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி புதிய ஆட்சியைப் பிடிக்கப்போகிறது.
பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் நடந்தது. இன்று நடைபெற்று வரும் வாக்குப் பதிவில், தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் உள்ளது.
முன்னதாக 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்று ஆம் ஆத்மி அறிவிக்காத நிலையில், தேர்தலில் இறங்கு முகத்தைச் சந்தித்தது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து முதல்முறையாகப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டார் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அர்விந்த் கேஜ்ரிவால். அந்த முடிவுகளின் அடிப்படையில் 21 லட்சத்துக்கும் அதிகமானோர் பகவந்த் மானுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் தேர்தலுக்கு முன்னதாக ஜனவரி 18ஆம் தேதியே பகவந்த் மான்(Bhagwant Singh Mann) முதல்வர் வேட்பாளர் என்று கேஜ்ரிவால் அறிவித்தார். அப்போதே அவர் யார் என்று தேசிய அளவில் கேள்வி எழுந்தது.
நகைச்சுவைக்காகத் தங்கப் பதக்கங்கள்
பஞ்சாப் கிராமமொன்றில் பிறந்த பகவந்த் மான், காமெடி நடிகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். 48 வயதாகும் இவர், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சடோஜ் கிராமத்தில் ஜாட் சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரியில் படிக்கும்போது காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் காமெடி நடிப்புக்காக, தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்.
இயல்பாகவே நையாண்டிகளில் ஆர்வம் கொண்டிருந்த பகவந்த், ஏராளமான கல்லூரிகளில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதுவே அவரை மெல்ல மெல்லத் தொலைக்காட்சியின் பக்கம் கொண்டு சென்றது. சக நண்பர்களுடன் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் கொண்டிருந்த பகவந்த், உள்ளூர் மற்றும் தேசிய அரசியல் போக்குகளைத் தனக்கே உரித்தான வகையில் நடித்து காண்பிக்கத் தொடங்கினார். தேசிய விருது பெற்ற திரைப்படமான 'மெயின் மா பஞ்சாப் தீ' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அழகிய கவிதைகளையும் எழுதுவார். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் கொண்டிருந்த பகவந்த், விடிய விடியத் தொலைக்காட்சியில் விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்பார். கைப்பந்து வீரரும்கூட.
அரசியல் வாழ்க்கை
ஆம் ஆத்மியின் பஞ்சாப் முகம் பகவந்த் மான் என்றாலும், அது அவரின் முதல் கட்சியல்ல. கல்லூரி நாட்களில், கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டாலும், பகவந்த் மான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்தாலும், அவருக்குள் இருந்த அரசியல் ஆர்வம், பகவந்த் மானை அரசியல்வாதியாக மாற்றியது. மன்பிரீத் சிங் பாதல் தலைமையிலான 2011-ல் பஞ்சாப் மக்கள் கட்சியைத் தொடங்குபவர்களில் ஒருவராக, நிறுவனத் தலைவராக பகவந்த் மான் அரசியலில் இறங்கினார்.
தொடர்ந்து 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் லெஹ்ரா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். டெல்லியைத் தொடர்ந்து, 2014-ல் பஞ்சாப்பில் காலடி எடுத்துவைத்த புதிய கட்சியான ஆம் ஆத்மியில் சேர்ந்தார். பிரபல நகைச்சுவை நடிகர், பாடகர், பேச்சாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம் கொண்டிருந்தவருக்கு, உடனடியாக ஆம் ஆத்மி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
ஒரே ஆம் ஆத்மி எம்.பி.
தனது சொந்தத் தொகுதியான சங்ரூரில் களம் கண்டார் பகவந்த் மான். பாஜக சார்பில் கூட்டணிக் கட்சியான அகாலிதளத்தின் தலைவர் அங்கு போட்டியிட்டார். நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசிக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஆனாலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார் பகவந்த். நாடாளுமன்றத்தில் கால் பதித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் நின்றார். 1,11,111 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மக்களவையில் ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே எம்.பி. இவர்தான்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து மக்களவையில் குரல் கொடுப்பவர். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைப் பணம் வட்டியுடன் கொடுக்கப்பட வேண்டும், பூச்சிகள் தாக்குதலால் இழப்பைச் சந்தித்த பருத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வேண்டும், வேளாண் சட்டங்களுக்காகப் போராடி இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு மத்திய அரசு உத வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட சர்ச்சைகளின் நாயகன்
இத்தனை நேர்மறைப் பண்புகளுக்கு மட்டும் பகவந்த் மான் சொந்தக்காரர் இல்லை. தன்னுடைய குடிப்பழக்கத்தால் ஏராளமான சர்ச்சைகளைச் சந்தித்துள்ளார். சக கட்சிக்காரரான யோகேந்திர யாதவே, பகவந்த் இடமிருந்து மதுவின் துர்நாற்றம் வந்தது என்று பேட்டியளித்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
அதேபோல ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ஃபத்தேகார் சாஹில் தொகுதியில் இருந்து ஹரிந்தர் சிங் கால்ஸா என்பவர் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், மக்களவையில் பக்கத்து இருக்கைக்காரரான பகவந்த் மானிடம் இருந்து மது வாசனை வீசியதால், தனது இருக்கையை மாற்ற வேண்டும் என்று மக்களவைத் தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பகவந்த் மான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று பஞ்சாப் முன்னாள் முதல்வரான கேப்டன் அமரீந்தர் சிங்கும் குற்றம்சாட்டினார்.
பிரபலப் பாடகர் மன்மீத் அலிஷேரின் இறுதிச் சடங்கில்கூட பகவந்த் மது அருந்தி இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. பகவந்த் மான் குடித்துவிட்டு, பல முறை பொது இடங்களில் தள்ளாடியபடியே செல்லும் காணொலிக் காட்சிகள் வைரலாகின.
தாயின் முன்பு சத்தியம்
எனினும் இவை அனைத்தும் எதிர்க் கட்சிகளின் சதி என்று பகவந்த் மான் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே ஆம் ஆத்மியின் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து 2019 ஜனவரி 1 முதல் மதுவைத் தொடமாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளதாக, தனது தாயார் முன்னிலையில் பகவந்த் மான் சத்தியம் செய்தார். இவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும், தற்போது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். உக்ரைன் பிரதமர் வொளாடிமிர் ஜெலன்ஸ்கி, காமெடி நடிகராக இருந்து உச்சம் தொட்டது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பேட்டியளித்த பகவந்த் மான், ''என்னைப் பொறுத்தவரையில், சிஎம் என்றால் சீஃப் மினிஸ்டர் (முதல் அமைச்சர்) என்று அர்த்தமல்ல. காமன் மேன் (சாமானியர்) என்று அர்த்தம். நான் முதலமைச்சரானாலும், அந்தப் பதவி என் தலைக்கு ஏறாது'' என்று தெரிவித்திருந்தார்.
பகவந்த் மான், முதலமைச்சராக இருப்பாரா, சாமானியராக இருப்பரா எனக் காலம் பதில் சொல்லும்.